Wednesday, August 24, 2016

பொதுக்காலம் ஆண்டின் 22ஆம் ஞாயிறு 28/08/2016பொதுக்காலம் ஆண்டின் 22ஆம் ஞாயிறு 
இன்றைய நற்செய்தி வாசகங்கள்.


சீராக்கின் ஞான நூல் 3: 17-18,20,28-29
எபிரேயர் 12: 18-19, 22-24
லூக்கா  14: 1,7-14


முன்னுரை:

பொதுக்காலம் ஆண்டின் 22ஆம் ஞாயிறுத் திருவழிப்பாட்டியில் பங்கேற்க ஓர் இனமாய் ஆலயம் வந்துள்ள இறைமக்களாகிய உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம்.
இயேசு குறுகலான பாதையின் வழியாகச் சென்ற வாரம் நிறைவாழ்வுக்கு அழைத்தவர், இன்று பணிவு, தாழ்ச்சி, தன்னடக்கம் ஆகிய மகத்தானச் செயல்கள் மூலம் நமக்குக் கிடைக்கும் மாபெரும் கொடையாய் கடவுள் முன்பாக உயர்த்தப்படுவதை இன்றைய வாசகங்கள் மூலம் எடுத்துரைக்கின்றார்.
தாழ்ச்சியுள்ளவர்கள் மற்றவர் மீது குறிப்பாக ஏழைகள் மீது அக்கறை காட்ட முடியும். தாழ்ச்சி உள்ளவர்களுக்குக் கடவுளின் மறைபொருள் வெளிப்படுத்தப்படுகின்றது. இவர்கள் ஆண்டவரை மாட்சிப்படுத்தும் பேறுபெற்றவர்கள். மரியாள் இதற்கு ஓரு சாட்சியாக உள்ளார். இறைவனின் அடிமை நான் என்று தன்னைத் தாழ்த்தியவர் அடைந்த உன்னத நிலையை நாம் அறிவோம்.
விட்டுக் கொடுப்பவர் வீழ்ந்ததில்லை. தாழ்ச்சியுடையோர் நிறைவாழ்வில் இறைவனால் உயர்த்தப்படுகின்றனர் என்பதை மனதில் பதிவு செய்து தாழ்வுமனப்பான்மையை ஒழித்துவிட்டு நான் கனிவும் மனத்தாழ்ச்சியும் உள்ளவன் என்ற இயேசுவின் அமுதமொழியை வாழ்வாக்க இத்திருப்பலியில் மன்றாடுவோம். வாரீர்...

 வாசகமுன்னுரை:


முதல் வாசக முன்னுரை:


சீராக்கின் ஞானநூலின் ஆசிரியர் குழந்தாய், நீ செய்வது அனைத்தையும் பணிவோடு செய்: அவ்வாறாயின், கடவுளுக்கு உகந்தோர் உனக்கு அன்புக் காட்டுவர். என்று கூறுகிறார். மனிதர் முன் உயர்ந்தவர் எப்பொழுதுமே உயர்ந்தவர்கள் போல் தோன்றினாலும் கடவுள் முன்னிலையில் தாழ்ந்தவர்களாகவே கருதப்படுவர். எனவே பணிவோடு நடந்து கொள்ள வேண்டியதின் அவசியத்தை இந்த முதல் வாசகத்தில் கேட்டு மனதில் பதிவு செய்வோம்.

இரண்டாம் வாசக முன்னுரை:

ஒரு காலத்தில் கடவுள் அச்சம் தரும் நெருப்பிலும், இருண்ட மேகத்திலும், கொடிய இருளிலும், சூழல்காற்றிலும் வெளிப்பட்டார். ஆனால் நமது காலத்தில் வானதூதர்களாலும், நீதிமான்களாலும் சூழப்பட்ட அமைதியின் கடவுளாக, தாழ்ச்சியின் கடவுளாகக் காட்சியளிக்கின்றார் என்று சினாய் மலைக்கும் சீயோன் மலைக்கும் உள்ள வித்தியாசங்களின் மூலம் இயேசு கிறிஸ்து நம்மை மீட்டு இறைவனோடு ஒப்புறவாகி உள்ளார் என்பதை வலியுறுத்தும் திருத்தூதர் பவுலின் எபிரேயருக்கு எழுதப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்..பதிலுரைப்பாடல்


ஒடுக்கப்பட்டோர்க்கு கடவுளே, மறுவாழ்வு அளித்தீர்
திருப்பாடல்
: 68: 3-10
நேர்மையாளரோ மகிழ்ச்சியடைவர்; கடவுள் முன்னிலையில் ஆர்ப்பரிப்பர்; மகிழ்ந்து கொண்டாடுவர். கடவுளைப் புகழ்ந்து பாடி அவரது பெயரைப் போற்றுங்கள்; `ஆண்டவர்' என்பது அவர்தம் பெயராம். - பல்லவி
திக்கற்ற பிள்ளைகளுக்குத் தந்தையாகவும் கணவனை இழந்தாளின் காப்பாளராகவும் இருப்பவர், தூயகத்தில் உறையும் கடவுள்! தனித்திருப்போர்க்குக் கடவுள் உறைவிடம் அமைத்துத் தருகின்றார்; சிறைப்பட்டோரை விடுதலை வாழ்வுக்கு அழைத்துச் செல்கின்றார். - பல்லவி
கடவுளே! உம் உரிமையான நாட்டின்மீது மிகுதியாக மழைபொழியச் செய்தீர்; வறண்டுபோன நிலத்தை மீண்டும் வளமாக்கினீர். உமக்குரிய உயிர்கள் அதில் தங்கியிருந்தன; கடவுளே! நீர் நல்லவர்; எனவே ஒடுக்கப்பட்டோர்க்கு மறுவாழ்வு அளித்தீர். - பல்லவி


மன்றாட்டுகள்:1. மூவொரு கடவுளே! இறைவா! பரம்பொருளே! உமது கனிவையும் மனத்தாழ்ச்சியையும் உம் திருஅவையிலுள்ள அனைவரும் மேற்கொண்டு பணிவு, தாழ்ச்சி ஆகிய உயரிய நோக்கங்களைத் தன் சொல்லிலும் செயலிலும் கடைப்பிடித்து உம் வார்த்தையின் ஆழத்தைப்புரிந்து செயலாற்ற வேண்டிய ஞானத்தையும், அன்பையும் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. விண்ணுக்கும் மண்ணுக்கும் ராஜாதிராஜனே! அமைதியின் அரசரே! எம் இறைவா! எம் நாட்டுத் தலைவர்கள் தொண்டு உள்ளம் கொண்டு அனைத்து மக்களையும் சமமாக நடத்தி அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கல்வி, பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, பொருளாதார உதவிகள் ஆகியவற்றை உம்மைப்போல் கனிவுடன் செய்து நல்லாட்சிப் புரிந்திடத் தேவையான ஞானத்தை நிறைவாய் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. பரிவன்புமிக்க எம் இறைவா! எம் இளையோர், இளம் பெண்கள், சிறுவர், சிறுமியர் இவர்களின் மனங்களில் இறுமாப்பு, ஆடம்பரம் என்ற இருள் சூழ்ந்துக் கொள்ளமால் அன்பு, பிறர்நலம் காணும் நல்லெண்ணம் வளர்ந்திடவும், தாழ்வுமனப்பான்மை அகற்றி தாழ்ச்சியில் உயர்ந்து ஓங்கிடத் தேவையான வரமருளவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. கருணை நிறைந்த இறைவா! கிறிஸ்துவின் சீடர்கள் எனப் பெருமை கொள்ளும் நாம் இயேசுவின் பணிவு, தாழ்ச்சி, பிறருக்குப் பணிச் செய்வது, தாராள உள்ளத்தோடு உதவிடும் நிலைகளை எடுத்துரைத்த இன்றைய வாசகங்களை உள்வாங்கி, அதன்படி நம் வாழ்வில் இயேசுவின் சீடராய் திகழ்ந்திடத் தேவையான ஞானத்தைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

www.anbinmadal.org

Thursday, August 18, 2016

பொதுக்காலம் ஆண்டின் 21ஆம் ஞாயிறு 21/08/2016பொதுக்காலம் ஆண்டின் 21ஆம் ஞாயிறு இன்றைய நற்செய்தி வாசகங்கள்.
முன்னுரை:

இறைமகன் இயேசுவின் கரங்களைப் பற்றிக் கொண்டு, நிறைவாழ்வை நோக்கி வெற்றி நடைபோடும் இறைகுலமே! பொதுக்காலம் ஆண்டின் 21ஆம் ஞாயிறுத் திருவழிப்பாட்டிற்கு உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம்.
வாழ்வுக்குச் செல்லும் வழிக் குறுகலானது. ஆனால் அழிவுக்குச் செல்லும் வழியோ அகலமானது. நம்மில் எத்தனையோ பேர் வாழ்க்கைப் போராட்டத்தில் துவண்டு விடாமல் இறுதிரைப் போராடி நம் வாழ்வில் வெற்றிப் பெறுகிறோம் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு விடுக்கின்றது.
எசாயா இறைவாக்கினர் கலக்கமுற்றுக் கவலையில் இருந்த மக்களை நம்பிக்கையில் தேற்றுவதை நாம் காணலாம். இறையாட்சியில் நுழைவதற்கும் நம் வாழ்வில் நம்பிக்கை என்னும் நங்கூரம் அவசியமானது. ஆண்டவரின் கண்டிப்பால் திருந்தியவர்கள் துயரத்திற்கு உள்ளனாலும் பின்பு அவர்கள் அமைதியும், நேர்மையான வாழ்வையும் பயனாகப் பெறுவர்.
இடுக்கலான வழி நீதியின் வழி, அமைதியின் வழி, மகிழ்ச்சியின் வழி. இடுக்கலான வாயில் வழியே நுழைவோர் நிலைவாழ்வைப் பெறுவர். இதை மேற்கொள்பவர்கள் வெகுசிலரே. அந்த வெகுசிலராகிய நாம் இறைமகன் இயேசுவில் நம்பிக்கை வைத்து அர்ப்பணவாழ்வு வாழ இத்திருப்பலியில் மன்றாடுவோம். வாரீர்...


வாசகமுன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

பாபிலோனியாவிற்கு அடிமைகளாக நாடு கடத்தப்பட்டவர்கள் திரும்புவார்கள் என்று நம்பிக்கை தெரிவிக்கும் எசாயா, தொடர்ந்து, பிற இனத்தவரும் இஸ்ரயேலின் மாட்சி நோக்கி வருவர் என்று இறைவாக்கு உரைக்கின்றார். எருசலேமின் கதவுகள் பிற இனத்தாருக்கும் திறந்துவிடப்படுகின்றன. உள்ளே நுழையும் அவர்கள் இறைவனின் மாட்சிமையை உணர்ந்து கொள்வார்கள். இறைவனின் மேய்ச்சல் நிலத்தைக் கண்டு கொள்வார்கள். இறைவன் அவர்களின் உரிமைச்சொத்தாகவும் மாறுவார் என்று எடுத்துரைக்கும் இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.


இரண்டாம் முதல் வாசக முன்னுரை:

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலிலிருந்து நாம் வாசிக்கக் கேட்கவுள்ள இன்றைய இரண்டாம் வாசகம் துன்பத்தின் முக்கியத்துவத்தையே மையப்படுத்திறது. 'கடவுளை' தந்தையாகவும், 'நம் அனைவரையும்' பிள்ளைகள் எனவும் உருவகிக்கும் ஆசிரியர், மகனைக் கண்டித்துத் திருத்தாத தந்தை உண்டோ என்று கேட்கின்றார். ஆக, நம் துன்பங்கள் எல்லாம் நம்மைக் கண்டித்துத் திருத்தவும், நம்மை நல்வழிப்படுத்தவதற்கே என்ற ஆசிரியர் திருத்தூதர் பவுலின் அறிவுரையாகிய இன்றைய இரண்டாம் வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்..

 
பதிலுரைப்பாடல்


உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.
திருப்பாடல் 117: 1. 2
பிற இனத்தாரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்! மக்களினத்தாரே! நீங்கள் அனைவரும் அவரைப் புகழுங்கள்! பல்லவி
ஆண்டவர் நமக்குக் காட்டும் மாறாத அன்பு மிகப் பெரியது; அவரது உண்மை என்றென்றும் நிலைத்துள்ளது. பல்லவி

 


மன்றாட்டுகள்:1. வாழ்வும் வழியுமான எம் இறைவா! உம் வார்த்தையை நம்பி அதனை வாழ்வாக்கிடத் திரு அவை தன் சொல்லாலும் செயலாலும் உம் வார்த்தையின் அடிச்சுவடுகளுக்கு ஏற்ப இறைமக்களை நேரியப் பாதையில் வழி நடத்திச் செல்லத் தேவையான இறை அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2 ஒளியின் நாயகனே! எம் இறைவா! எம் நாட்டுத் தலைவர்கள் மக்களை அடக்கி ஒடுக்கி ஏழைப் பணக்காரன் என்ற பாகுபாடுகளைக் களைந்து எல்லோரும் சமம் என்று மாண்பிலும் மகத்துவத்திலும் சிறந்து விளங்கிட உம் பாதை அவர்களுக்கு வழியும் ஒளியுமாக இருந்து செயல்படத் தேவையான ஞானத்தை நிறைவாய் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. நீதியின் நாயகனே எம் இறைவா! நீர் கண்டித்துத் திருந்தும் மனிதர் பேறுபெற்றவர் என்ற இறைவார்த்தைக்கு ஏற்ப எம் இளையோர், இளம் பெண்கள், சிறுவர், சிறுமியர் தங்கள் சொல்லாலும் செயலாலும் கிறிஸ்துவுக்கும் சமூகத்திற்கும் மாண்புள்ளவர்களாக வாழ்ந்து, நீர் கண்டித்தும் திருத்தும்போது, அதை ஏற்றுக் கொண்டு தளர்ந்து போகாமல் வாழ்ந்திட வரமருளவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. படைப்பிற்கெல்லாம் சென்று நற்செய்தியை அறிவியுங்கள் என்று கூறிய எம் இறைவா! இன்றைய சூழலில் கிறிஸ்தவத்திற்கு எதிராக எழுப்பப்படும் பரிவினைகள், திவிரவாதம் வன்முறை கலச்சாரம் இவற்றின் பிடிலிருந்து திருச்சபையைக் காப்பற்றி உமக்கு எதிராகச் செயல்படும் மனிதர்கள் தங்கள் அறியாமையை மறந்து உண்மைக் கடவுளை ஏற்றுக் கொண்டு உம் பணி ஆற்றிட தேவையான ஞானத்தைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. ஏழைகளுக்கும் நற்செய்தி
, சிறைப்பட்டோருக்கு விடுதலை, ஒடுக்கப்பட்டோருக்கு உரிமை வாழ்வு என்று அருள் தரும் விவிலிய வார்த்தைக்கு ஏற்ப எம் நாட்டில் நிலவும், பஞ்சம், ஏழ்மை, வறுமை, பசி, பட்னி வேலையில்லாத் திண்டாட்டம், கல்வி, வியாபர மயமாக்குதல் போன்றவைகளை நீர் கண்ணோக்கி ஏழைகளின் வாழ்வு வளம்பெறத் தேவைகளை உணர்ந்துச் சந்தித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.Wednesday, August 10, 2016

பொதுக்காலம் ஆண்டின் 20ஆம் ஞாயிறு 14/08/2016பொதுக்காலம் ஆண்டின் 20ஆம் ஞாயிறு
இன்றைய நற்செய்தி வாசகங்கள்.முன்னுரை:

படைகளின் ஆண்டவரின் உறைவிடத்தில் அமர்ந்தும் ஆற்றுப்படுத்திக் கொள்ள இந்தப் பொதுக்காலம் ஆண்டின் 20ஆம் ஞாயிறுத் திருவழிப்பாட்டிற்கு வந்துள்ள அன்புள்ளங்களே! இறைஇயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துகள் கூறி அன்புடன் வரவேற்கின்றோம்.
'மண்ணுலகில் தீமூட்டவே வந்தேன்!' என்று தான் வந்ததை அறிவிக்கும் இயேசு தன் வருகை அமைதியை அல்ல பிளவையே உண்டாக்கும் என்று சொல்வதோடு, தான் பெற வேண்டிய இரத்தத் திருமுழுக்கே அந்தப் பிளவின் முதற்கனி என்கின்றார். இறையரசு பற்றிய செய்தி அதை அறிவிப்பவருக்கு அழிவாக முடிகிறது. பிளவு, துன்பம், அறிவிப்பவரின் அழிவு - இந்த மூன்றும்தான் இறையரசின் தாக்கங்கள்.
இயேசுவை அல்லது இறையரசைத் தேர்ந்து கொண்டால் நாம் மற்றதை விட்டுவிடுதல் அவசியம். இதற்குத் தேவை மனத்திடம். தனக்குத் துன்பம் வந்தாலும் தான் தேர்ந்துகொண்ட 'சாய்ஸ்' இதுதான் என்று நிலைத்து நிற்கிறார்கள் எரேமியாவும், இயேசுவும். 'அவரின்மேல் நம் கண்களைப் பதிய வைப்போம்' என்று சொல்லி எபிரேயர் திருமடலின் ஆசிரியரும் தன் மக்களை அழைக்கிறார். அவரின் மேல் கண்களைப் பதிய வைப்போம். நம் கண்கள் கசங்கலாம். ஆனால், இறுதியில் நம் பார்வைத் தெளிவாகும்! தெளிவானப் பார்வைப் பெற்றிடத் திருப்பலியில் மன்றாடுவோம். வாரீர்...

 வாசகமுன்னுரை:


முதல் வாசக முன்னுரை:

எரேமியா இறைவாக்கினர் தன் சொந்த மக்களாலும் அரசனாலும் புறக்கணிக்கப்பட்டு பாழுங்கிணற்றில் தள்ளப்படுகின்றார். அவரின் இறைவாக்கும், செய்தியும் மக்களுக்கு அச்சம் தருவதாலும், மக்களை மகிழ்ச்சிப்படுத்தாததாலும் இவ்வாறு செய்கின்றனர் மக்கள். இருந்தாலும் எத்தியோப்பியன் ஒருவன் அரசனிடம் முறையிட அரசனும் எரேமியாவை விடுவிக்க ஆணையிடுகின்றான். இவ்வாறாக, ஒரே நகரில் சிலர் எரேமியாவுக்கு சார்பாகவும், பலர் அவருக்கு எதிராகவும் இருக்கின்றனர். ஆக, இறைவனின் செய்தி அல்லது இறைவாக்கு கொண்டு வரும் நிகழ்வு மக்களிடையே பிளவு என்று எடுத்துரைக்கும் இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

இரண்டாம் முதல் வாசக முன்னுரை:

நம்பிக்கை என்றால் என்ன என்று வரையறை செய்துவிட்டு, தொடர்ந்து ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, சிம்சோன் என முதல் ஏற்பாட்டு குலமுதுவர்களைப் பட்டியலிட்டு அவர்கள் வாழ்வில் நம்பிக்கை வேரூன்றியிருந்த விதத்தை எடுத்துச் சொல்லும் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர் இயேசுவின் மேல் கண்களைப் பதிய வைத்து தொடர்ந்து ஓடுவோம் என்றும், எவ்வித துன்பங்களையும் எதிர்கொள்வோம் என்றும் அறிவுறுத்தும் திருத்தூதர் பவுலின் இன்றைய இரண்டாம் வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்..

பதிலுரைப்பாடல்
ஆண்டவரே, எனக்கு உதவி செய்ய விரைந்து வாரும்.


திருப்பாடல்40: 1. 2. 3. 17


நான் ஆண்டவருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவரும் என் பக்கம் சாய்ந்து எனது மன்றாட்டைக் கேட்டருளினார். பல்லவி
அழிவின் குழியிலிருந்து என்னை அவர் வெளிக்கொணர்ந்தார்; சேறு நிறைந்த பள்ளத்தினின்று தூக்கியெடுத்தார்; கற்பாறையின்மேல் நான் காலூன்றி நிற்கச் செய்தார்; என் காலடிகளை உறுதிப்படுத்தினார். பல்லவி
புதியதொரு பாடலை, நம் கடவுளைப் புகழும் பாடலை என் நாவினின்று எழச் செய்தார்; பலரும் இதைப் பார்த்து அச்சங்கொண்டு ஆண்டவர் மீது நம்பிக்கை கொள்வர். பல்லவி
நானோ ஏழை; எளியவன்; என் தலைவர் என்மீது அக்கறை கொண்டுள்ளார்; நீரே என் துணைவர், என் மீட்பர்! என் கடவுளே, எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும். பல்லவி


மன்றாட்டுகள்:1. அன்பின் திருவுருவே எம் இறைவா! உம் திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், திருஆட்சியாளர்கள், அருட்பணியாளர்கள் துறவியர், பொதுநிலையினர் ஆகிய அனைவரும் தங்கள் வாழ்வை இறைவாக்கினர் எரேமியாவைப் போல, சான்றுப் பகர்ந்து வாழ்ந்திட வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. தலைவர்களுக்கெல்லாம் தலைவராகிய எம் இறைவா
! எம் நாட்டில் நிலவும், வன்முறை, கொலை, கொள்ளை, இனம், மொழி, சாதி, சமயம் போன்றவைகளால் காயப்பட்டுக் கண்ணீரோடு நிற்கும், எம் உடன்பிறவாச் சகோதரச் சகோதரிகள் பெரியோர் ஆகிய அனைவருக்கும் பாதுகாப்போடு வாழவும் தனி மனிதச் சுதந்திரத்தோடு வாழவும் தேவையான ஞானத்தை எம நாட்டு அரசியல் தலைவர்களுக்குத் தந்த நேரியப் பாதையில் மக்களை வழி நடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. இரக்கத்தின் சிகரமே எம் இறைவா! ஏழைகள், அனாதைகள், கைவிடப்பட்வர்கள், வறுமையில் வாடுபவர்கள், விதவைகள், ஆகிய அனைவரும் பொருளாதார நெருக்கடியிலிருந்தும், பாதுகாப்பற்றச் சூழலில் உள்ள இவர்களை அன்போடு பாதுகாத்து, அவர்களின் வாழ்வு வளம்பெற, நாங்கள் அனைவரும் தோள் கொடுத்து உதவிட, தொண்டுள்ளம் கொண்டவர்களாய் வாழ்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. விண்ணரசின் திறவுகோலைச் சொந்தமாகிப் கொண்ட குழந்தைகளைப் போல் நாங்களும் எங்கள் தனிமனித வாழ்வில், குடும்ப வாழ்வில், சமூக வாழ்வில் குழந்தைகளின் மனநிலையோடு அன்பு, மகிழ்ச்சி, மன்னித்தல், விட்டுக்கொடுத்து வாழத் தேவையான உமது ஆவியின் அருளை நிறைவாகப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5.  இன்றைய நவீன உலகில் எம் இளைஞர், இளம்பெண்கள் எதிர்கொள்ளும் வேலையிலாத் திண்டாட்டம், திருமணத் தடைகள், சமூகத்தில் இளம்பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் தொல்லைகள் இவை அனைத்திலிருந்தும், முழுமையான விடுதலைப் பெற்று ஒளியின் மக்களாகத் துலங்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்
.
                     www.anbinmadal.org