Thursday, March 10, 2016

தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறு 13/03/2016



தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறு

 

இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

எசாயா43: 16-21
பிலிப்பியர் 3: 8-14
யோவான் 8:1-11


முன்னுரை:

இயேசுவிற்கு மிகவும் நெருக்கமானவர்களே! தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிற்றை கொண்டாடுகிறோம். ஒவ்வொரு ஞாயிறும் ஒரு தனிப்பட்டக் கருத்தை எடுத்துச் சிந்தித்து நம் அகவாழ்வை ஆராய்ந்து பார்க்க வாய்ப்புக் கொடுக்கப்பட்டது. தவக்காலத்தின் இறுதி ஞாயிற்றுக் கிழமையாகிய இன்று மீண்டும் நம் அகவாழ்வைச் சிந்திக்க ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. தவறுவது மனித  இயல்பு. ஆனால் தவறுக்குப்பின் திருந்தி எழுவதுதான் மனிதனின் மாண்பு. அது தான் கிறிஸ்தவனின் பண்பு  என்பதை இன்றைய இறைவாக்குகள் அதிலும் சிறப்பாக நற்செய்தி வாசகம் நமக்கு வெளிப்படுத்துகின்றது

இயேசு இரக்கத்திலும், மன்னிப்பதிலும், அன்பு செய்வதிலும் என்றும் மாறாதவர். இயேசு யாரையும் தீர்ப்பிடுவதில்லை. இரண்டாம் வாசகத்திலும் நான் விரும்புவது எல்லாம் இயேசுவை அறிந்து கொள்ள வேண்டும் என்ற தூய பவுலின் கூற்றும், முதல் வாசகத்தில் இதோ, நாம் புதியன செய்கிறோம் என்ற எசாயா இறைவாக்கினின் முழக்கமும், இயேசுவின் பாணியில் நாம் பிறருக்குத் தீர்ப்பிடாமல், மன்னித்து ஏற்கும் மனப்பக்குவத்திற்கு நம்மை அழைக்கின்றது. அவரில் ஓப்புறவு கொண்டு நம்மிலே மனமாற்றம் காண இத்திருப்பலியில் முழுமனதோடு பங்கேற்போம்.


வாசக முன்னுரை:

பாபிலோனியாவில் அடிமைப்பட்டுக் கிடந்த யூத மக்களை விடுதலை செய்வதாக இறைவாக்கினர் எசாயா வழியாக வாக்களிக்கும் இறைவன், அவர்களுக்கு தான் எகிப்தில் செய்த அறிகுறியை நினைவுபடுத்தி, தான் இப்போது செய்வது அதனிலும் புதியது என்று தான் தரவிருக்கும் விடுதலையின் மேன்மையைச் சொல்கின்றார். எகிப்தின் அடிமைத்தனம் மிகப்பெரிய வடுவை இஸ்ரயேலரின் வாழ்வில் ஏற்படுத்தியிருக்கலாம். 'என்னை அவன் அடிமையாக வைத்திருந்தான்' என்பதை அவர்களால் எப்படி மறக்க முடியும். ஆனால், மறந்தால்தான் இறைவனின் புதிய அற்புதங்களை இரசிக்க முடியும்.இறைவனின் புதிய செயல் என்னவென்று இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்க நாம் கவனமுடன் கேட்போம்.

பவுலடியாரைப் பொறுத்த மட்டில் ஒருகாலத்தில் முதன்மையானவை என இருந்தவை இப்போது கிறிஸ்துவை அறிந்தவுடன் கடைநிலைக்குச் சென்றுவிட்டன. 'கிறிஸ்துவைப் பற்றிய அறிவின் முன் இவை யாவும் குப்பை அல்லது இழப்பு'. 'கடந்ததை மறந்து விட்டு, முன்னிருப்பதைக் கண்கொண்டு' என்று கிறிஸ்துவைப் பின்பற்றுவதற்கு பவுலடியார் இங்கே பயன்படுத்தும் ஓர் உருவகம் தான், 'பந்தயத்தில் ஓடுவது.' பந்தயத்தில் ஓடுவோரின் கண்முன் இலக்கு மட்டுமே இருக்க வேண்டும். நாம் இதுவரை ஓடிவந்த டிராக் எப்படி இருந்தாலும், டிராக் மாறி வந்தாலும், இன்றுமுதல் சரியான டிராக்கில் ஒவ்வொரு அடியையும் முழுமையாக எடுத்து வைத்து வாழவோம். இவ்வாறு இயேசுவைப் பற்றிக் கொள்ள அழைக்கும் திருத்தூதர் பவுலடியாரின் வார்த்தைகளுக்கு செவிமெடுப்போம்.

பதிலுரைப்பாடல்:
திருப்பாடல்126: 1- 6
பல்லவி: ஆண்டவர் மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் பெருமகிழ்வடைகின்றோம்.

சீயோனின் அடிமை நிலையை ஆண்டவர் மாற்றினபோது, நாம் ஏதோ கனவு கண்டவர் போல இருந்தோம். அப்பொழுது, நமது முகத்தில் மகிழ்ச்சி காணப்பட்டது. நாவில் களிப்பாரவாரம் எழுந்தது.  பல்லவி 

உன "ஆண்டவர் அவர்களுக்கு மாபெரும் செயல் புரிந்தார்'' என்று பிற இனத்தார் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் நாம் பெருமகிழ்ச்சியுறுகின்றோம். பல்லவி
 
ஆண்டவரே! தென்னாட்டின் வறண்ட ஓடையை நீரோடையாக வான்மழை மாற்றுவதுபோல, எங்கள் அடிமை நிலையை மாற்றியருளும். கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள். பல்லவி 
 
விதை எடுத்துச் செல்லும்போது - செல்லும்போது - அழுகையோடு செல்கின்றார்கள்; அரிகளைச் சுமந்து வரும்போது - வரும்போது - அக்களிப்போடு வருவார்கள். பல்லவி

மன்றாட்டுகள்:

உங்கள் பதில்:
இறைஇரக்கத்தின் ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
அன்புத் தந்தையே எம் இறைவா! திருஅவை உள்ள அனைவரும் ஓப்புறவு அருட்சாதனத்தைப் பற்றி நாம் கொண்டிருக்கின்ற தவறான கண்ணோட்டங்களைக் களைந்து, நல்ல ஒப்புறவு அருட்சாதனத்தில் பங்குகொண்டு இத்தவக்கால பலன்களை முழுமையாக அனுபவிக்கவும், இயேசுவின் உயிர்ப்பில் இணைந்திட வேண்டிய உறுதியான மனநிலையையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

எளியவர்க்கு இரங்கும் இறைவா! எங்கள் இடுக்கண்களையும் பலவீனங்களையும் நீ நன்கு அறிவீர். நாங்கள் எவ்வளவுக்கு வலுவற்றவர்களாக இருக்கின்றோமோ அவ்வளவுக்கு நீர் உறுதுணை தந்து எங்களை வலுப்படுத்துகிறீர். உமது கொடையாக நாங்கள் பெற்றுள்ள இந்த ஒப்புறவுக் காலத்தை நன்றியுடன் பயன்படுத்தி எங்கள் வாழ்வைப் புதுப்பிக்க வேண்டிய வரம் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
ஆண்டவருடைய கட்டளைகளை இதயத்தில் இருத்திக் கொள்பவர் நீடிய ஆயுளையும், நிலையான நலன்களையும் பெற்றுக் கொள்வார் என்ற மொழிந்த எம் இறைவா! கடவுள் மிகுந்த இரக்கம் உடையவர். நம்மீது அவர் மிகுந்த அன்பு கொண்டுள்ளார் என்பதை உணர்ந்து, அதே இரக்கத்தையும் அன்பையும் நாம் பிற மனிதர்களுக்கும் காட்ட எங்களுக்கு அருள் புரியுமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
அரசர்களுக்கெல்லாம் அரசராகிய எம் இறைவா! எம் நாட்டின் தலைவர்களுக்காக மன்றாடுகிறோம். அணிகள் சேர்த்துக் கொண்டு மற்ற்றவர்களை வெறுத்து ஒதுக்கமால் அனைவரும் இந்நாட்டு மக்கள், அனைவருக்கும் சேவை செய்யவே தெரிந்துக் கொள்ளப்பட்டோம் என்பதனை உணர்ந்திடக் கூடிய நல்ல மனதினை தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

No comments:

Post a Comment