Wednesday, June 29, 2016

பொதுக்காலம் 14ஆம் ஞாயிறு -03-07-2016



பொதுக்காலம் 14ஆம் ஞாயிறு



இன்றைய நற்செய்தி வாசகங்கள்.



முன்னுரை:



இறைஇயேசுவின் இனிய நாமத்தில் அன்பு வாழ்த்துக்கள்! கடந்த இரண்டு வாரங்களாக இயேசு தரும் சீடத்துவத்தின் தத்துவத்தைச் சிந்தித்தோம். தன்னை மறுப்பதும்
, தன் சிலுவையைச் சுமந்து கொண்டு இயேசுவை நாள்தோறும் பின்பற்றுதலுமே சீடத்துவம் என்று கற்பித்த இயேசு இன்றும் நமக்கு எல்லாம் துறந்துச் சென்ற சீடர்களின் இழப்புகள் மகிழ்ச்சி தரும் சிறப்பு நிகழ்வாக கூறுவது உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்பது பற்றியே மகிழுங்கள் என்பதே!

இன்றைய சூழலில் உலகப் பற்றுக்களைக் களைந்து எளிமையாக வாழமுடியுமா? என்ற கேள்வி நம்மில் எழுகிறது. காரணம் இறைவனைப் பற்றியும் பிறரைப் பற்றியும் மறந்துச் சுயசிந்தனையில் ஊறிப்போனதே ஆகும். எனவே தான் அறிவுப்பு பணியை ஏற்போர் இறை நம்பிக்கை மிகுந்தவராகவும், விவேகமுடையவராகவும் செயல்பட வேண்டும் என்று இயேசு நினைவுட்டுகின்றார். பிறருடன் நலமாக உறவுடன் வாழும்போது இயேசுவின் சமாதானத்தில் வாழ்கின்றோம். இத்தகைய அமைதியைத் தான் இயேசு நமக்கு விட்டுச் செல்வதாகக் கூறினார். இதையே நாம் பிறருக்குத் தரவேண்டும் என்று நம்மையும் பணிக்கின்றார். எனவே திருப்பலியில் குருவும் ஆண்டவருடைய சமாதானம் உங்களோடு இருப்பதாக என்று வாழ்த்துகின்றார். கிறிஸ்துவின் சமாதானத்தூதுவராக வாழ ஒவ்வொரு திருப்பலியிலும் சிறப்பு அழைப்புத் தருகின்றார் இறைமகன் இயேசு. இதனை ஏற்று இறையரசை அறிவிக்க இணைந்துச் செயல்படுவோம். வாரீர்.


வாசகமுன்னுரை:

 


முதல் வாசக முன்னுரை:


'தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல நான் உங்களைத் தேற்றுவேன். எருசலேமில் நீங்கள் தேற்றப்படுவீர்கள்' என்று கடவுளைத் தாயாக எசாயா உருவகிக்கின்றார். பேறுகால வேதனையுற்றுத் தன் குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய், புதிய உயிர் இந்த உலகிற்கு வந்துவிட்ட மகிழ்ச்சியில் தன் வேதனையை மறந்துவிடுகின்றாள். பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்டதும், அங்கே யூதா நாட்டினர் அனுபவத்தத் துயரங்கள், இழப்புகளும் பேறுகால வேதனைப் போன்றவைதாம். ஆனால் இன்று அவை மறைந்துவிட்டன. இறைவன் தரும் மீட்பு மற்றும் விடுதலை என்ற புதிய மகிழ்ச்சி அவர்களின் பழைய இழப்புக்களை மறக்கச் செய்கிறது. இந்நிகழ்வை விவரிக்கும் முதல் வாசகமான எசாயாவின் வார்த்தைகளுக்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.


இரண்டாம் முதல் வாசக முன்னுரை:






'என்னைப் பொறுத்தவரையில் உலகமும், உலகைப் பொறுத்தவரையில் நானும் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன்' என்கிறார் பவுல். உலகையும், பவுலையும் இணைப்பது சிலுவையும், அந்தச் சிலுவையில் தொங்கும் இயேசுவும். சிலுவையில் அறையப்பட்டிருப்பது வேதனையை, வலியைத் தந்தாலும், அந்த வலிதான் பவுலை இயேசுவோடும், உலகத்தோடும் இணைக்கிறது. தான் அறிவித்த நற்செய்தி, அந்த நற்செய்தியைத் தான் பெற்ற விதம், தன் பணி, தன் பணியால் கிறிஸ்துவில் நம்பிக்கைக் கொண்டவர்கள் பெற்ற உரிமை வாழ்வு, அந்த உரிமை வாழ்வால் உந்தப் பெறும் தூய ஆவியானவரின் கனிகள் என எழுதி, கலாத்திய திருஅவையை நம்பிக்கையில் நிலைத்திருக்க அறிவுறுத்தும் திருத்தூதர் பவுல் தன் கடிதத்தை நிறைவுச் செய்யும் பகுதியே இன்றைய இரண்டாம் வாசகம்.



பதிலுரைப் பாடல்

 

திபா. 66: 1-7,16,20.


பல்லவி: அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்!



அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்! அவரது பெயரின் மாட்சி யைப் புகழ்ந்து பாடுங்கள். அவரது புகழை மேன்மைப்படுத்துங்கள். கடவுளை நோக்கி உம் செயல்கள் எவ்வளவு அஞ்சத்தக்கவை. என்று சொல்லுங்கள். பல்லவி


அனைத்துலகோர் உம்மைப் பணிந்திடுவர். அவர்கள் உம் புகழ் பாடிடுவர். உம் பெயரைப் புகழ்ந்து பாடிடுவர். என்று சொல்லுங்கள். வாரீர்! கடவுளின் செயல்களைப் பாரீர்! அவர் மானிடரிடையே ஆற்றிவரும் செயல்கள் அஞ்சுவதற்கு உரியவை. பல்லவி


கடலை உலர்ந்த தரையாக அவர் மாற்றினார். ஆற்றை அவர்கள் நடந்து கடந்தார் கள். அங்கே அவரில் நாம் அகமகிழ்ந்தோம். அவர் தமது வலிமையால் என்றென்றும் அரசாள்கிறார்! பல்லவி


கடவுளுக்கு அஞ்சி நடப்போரே! அனைவரும் வாரீர்! கேளீர்! அவர் எனக்குச் செய்த தனை எடுத்துரைப்பேன். என் மன்றாட்டைப் புறக்கணியாத கடவுள்போற்றி! தம் பேரன்பை என்னிடமிருந்து நீக்காத இறைவன் போற்றி! பல்லவி



மன்றாட்டுகள்:



1.அறுவடையின் நாயகனே! எம் இறைவா! திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினர் ஆகியோர் இறை நம்பிக்கை மிகுந்தவராகவும், விவேகமுடையவராகவும் செயல்படவும், இழப்புகளே மகிழ்ச்சி என்று அதனை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தையும், அறுவடைக்காகச் சிறப்பாக உழைக்கத் தேவையான ஞானத்தையம் உடல் நலத்தையும் நிறைவாய் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.



2.எங்களை வளமான உமது நிறைவாழ்வுக்கு இட்டுச் செல்லும் இறைவா! எங்கள் குடும்பங்கள் பவுலடியார் கூறிப்படித் இயேசுவின் சிலுவையிலன்றி வேறெதிலும் ஒரு காலும் பெருமை பாராட்டாமல் இயேசுவின் அடிமைகளாக வாழவும் இறையரசு பணிகளை ஆர்வமுடன் செய்யவும் வேண்டிய வரங்களைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.



3. எம்மைச் செயல்வீரராய் மாற்றும் அன்புத் தந்தையே! எம் இறைவா! இன்றைய உலகில் குழப்பங்களும் போராட்டங்களும், அமைதியின்மையும், சுயநலப் போக்குகளும் மலிந்தக் கிடக்கின்ற சூழலில் அமைதியின் தூதுவராய் எம் உலக அரசியல் தலைவர்கள் சமாதானப் போக்கைக் கையாண்டு மக்களுக்கு நன்மைகள் செய்து வளமான வாழ்வையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.



4. எம்மைப் புதுபடைப்பாய் மாற்றும் எம் இறைவா! பணிவிடை பெறுவதற்கன்று பணிவிடை புரியவே வந்தேன் என்ற இயேசுவின் வார்த்தைகளை மனதில் கொண்டு எம் இளையோர் சிறந்த பணியாளராக உம் திருத்தூதர் தோமாவைப் போல் தன்னலமற்ற சேவையால் உலகமாந்தர்களை உம் பக்கம் ஈர்க்க வேண்டிய வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.



 www.anbinmadal.org

Wednesday, June 22, 2016

பொதுக்காலம் ஆண்டின் 13ஆம் ஞாயிறு 26/06/2016

பொதுக்காலம் ஆண்டின் 13ஆம் ஞாயிறு






இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

திருப்பலி முன்னுரை:


பொதுக்காலம் ஆண்டின் 13ஆம் ஞாயிறை பொதுநிலையினரின் ஞாயிறாக் கொண்டாட திருஅவை அழைக்கும் இவ்வேளையில் நம் ஆலயத்தில் ஒருமனதோராய் குழுமியிருக்கும் இறைமக்களாகிய உங்களை அன்புடன் அழைக்கிறோம்.
கலப்பை, நுகம் என்ற வார்த்தைகள் இன்றைய வாசகங்களை அலங்கரிக்கும் சொற்கள். இன்றைய முதல் வாசகத்தில், கலப்பை பிடித்து உழுது கொண்டிருந்த எலிசாவைத் தேடி வந்து தன் சீடராக எடுத்துக் கொள்கின்றார் இறைவாக்கினர் எலியா. நற்செய்தி வாசகத்தில் 'கலப்பையில் கைவைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல' என இறையாட்சிக்கான சீடத்துவத்தின் பண்பு பற்றிச் சொல்கின்றார் இயேசு. கிறிஸ்துவில் உயிர்பெற்றெழுந்த கலாத்திய திருஅவை மக்கள் மீண்டும் அடிமைத்தனம் என்னும் 'நுகத்தை' ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று இரண்டாம் வாசகத்தில் அறிவுறுத்துகின்றார் பவுல். கலப்பை களத்தில் இறங்கினால்தான் கலப்பையின் நோக்கமும், உழுபவரின் நோக்கமும், விவசாய நிலத்தின் நோக்கமும் நிறைவேறுகிறது. இவைகளின்  நோக்கம் நிறைவேறவில்லை என்றால் விதை விதைப்பதும், விதை விளைச்சல் தருவதும் சாத்தியமல்ல. நம் சிந்தனையில் இறைவார்த்தைகளால் நம் உள்ளத்தை உழுது நிலைவாழ்வு என்னும் விளச்சலை அடைய ஈடுபாடு உள்ள கிறிஸ்துவ வாழ்வை உயிரோட்டமாக வைத்துக்கொள்ள இத்திருப்பலிக் கொண்டாடங்களில் உளமாறப் பங்குக்கொண்டு செபிப்போம்.


வாசக முன்னுரை:


முதல் வாசக முன்னுரை:

இன்றைய முதல் வாசகத்தில், கலப்பை பிடித்து உழுது கொண்டிருந்த எலிசாவைத் தேடி வந்து தன் சீடராக எடுத்துக் கொள்கின்றார் இறைவாக்கினர் எலியா. எலிசா, 'நான் என் தாய் தந்தையிடம் விடைபெற்று வர அனுமதி தாரும் என்று கேட்க  'சென்று வா!' என அனுமதிக்கின்றார் எலியா. எலிசாவும் தன் இல்லம் சென்று தன் மாடுகளைப் பிடித்து அடித்து, தன் கலப்பையை நெருப்பிட்டு, இறைச்சியைச் சமைத்து தன் இல்லத்தாரோடு விருந்துண்டு அவர்களிடம் விடைபெறுகின்றார். ஆக, தான் செய்த விவசாயப் பணியை அடியோடு ஒழித்து தன் இறந்தகாலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கின்றார் எலிசா. இறைஅழைத்தலை ஏற்ற நம்மை அழைக்கும் இந்த வாசிகத்திற்குக்  கவனமுடன் செவிமெடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:

 இன்றைய இரண்டாம் வாசகத்தில் கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டவர் பெற்றுள்ள உரிமை வாழ்வு பற்றி பேசும் திருத்தூதர் பவுலடியார், அந்த உரிமை வாழ்வில் இணைந்த ஒருவர் தான் கொண்டிருந்த இறந்த காலத்தை, திருச்சட்டத்தின் அடிமை வாழ்வை, அதற்குத் துணை போகும் ஊனியல்பை முற்றிலும் தூக்கி எறிய வேண்டும் என அறிவுறுத்துகின்றார். இறந்த காலத்தையும், ஊனியல்பையும் கழுத்தை அமுக்கும் நுகம் என்று உருவகிக்கும் பவுல், 'மீண்டும் அடிமைத் தளை என்னும் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொள்ளாதீர்கள்'  எனக் கட்டளையிடுகின்றார். கிறிஸ்துவில் உயிர்பெற்றெழுந்த கலாத்திய திருஅவை மக்கள் மீண்டும் அடிமைத்தனம் என்னும் 'நுகத்தை' ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தும் இவ்வாசகத்தைக் கருத்துடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்


திபா 16: 1-2, 5. 7-8. 9-10. 11

பல்லவி: ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து.


இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.  நான் ஆண்டவரிடம் `நீரே என் தலைவர்' என்று சொன்னேன்.  ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே. பல்லவி
எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்; இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது.  ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன். பல்லவி
என் இதயம் அக்களிக்கின்றது; என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது; என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும். ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர்; உம் அன்பனைப் படுகுழியைக் காணவிடமாட்டீர். பல்லவி
வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு. பல்லவி

 மன்றாட்டுகள்:


1.  அன்புத் தந்தையே! எம் இறைவா!  அருட்பணியாளர்களும், பொதுநிலையினரும் இணைந்து செயல்பட்டால் அங்குத்  திருச்சபை நிறுவப்படுகின்றது என்ற மொழிக்கேற்ப எம் திருஅவையில் அருள் வாழ்வில் பொதுநிலையினர், குருநிலையினர் என்ற பாகுபாடு இன்றி அனைவரும் கிறிஸ்துவின் மாண்பிலும், மகத்துவத்திலும் இறையாட்சி பணியினை தமது சொல்லாலும், செயலாலும் சான்று பகிர்ந்திட வரமருள வேணடுமென்று பொதுநிலையினர் ஞாயிறு ஆன இன்று புனித தாமஸ்மூர் வழியாக இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. ஏழைகளைத் தேடிவந்த எம் அன்பு தெய்வமே! இன்றைய உலகில் பாவத்தைக் குறித்த பயமோ கவலையோ அச்ச உணர்வற்ற இக்ககாலத்தில் அறிவியல் முன்னேற்றங்கள் போன்ற சில மாயைகளை மனத்தில் கொண்டு உம்மோடு ஒப்புறவாக தூய மனச்சான்றுடன் எங்கள் சொல்லாலும் செயலாலும் வாழ்ந்திட எங்களை நல்வழி கொணர வேண்டுமென்று பொதுநிலையினர் ஞாயிறு ஆன இன்று புனித தாமஸ்மூர் வழியாக இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. நல்ஆயனே எம் இறைவா இக்கால விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் தொழில் முன்னேற்றங்கள் இவைகளால் ஏற்படும் அறிவு சார்ந்த செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு இறைஅச்சம் குறைந்தவர்களாய் உலகம் போக்கிலான வழிகாட்டுதலில் தங்கள் வாழ்வை இழந்த  எம் இளையோர் சிறுவர், சிறுமிகள் ஆகிய அனைவரும் உண்மையை உணர்ந்தவர்களாக இறைஅச்சமே ஞானத்தின் தொடக்கம் என்பதை உணர்ந்து வாழ தேவையான அருளை பொழிய வேண்டுமென்று பொதுநிலையினர் ஞாயிறு ஆன இன்று புனித தாமஸ்மூர் வழியாக இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. நலன்களின் நாயகனே  எம்  இறைவா! இன்றைய உலகில் பரவிவரும்  புதிய நோய்கள், புதிய மருந்துகள் இவைகளினால் மனுகுலம் வலுவிழந்து அநேக பாவத்தினால் வரக்கூடிய வியாதிகளிலிருந்தும் உமது குணமளிக்கும் ஆற்றலினால் நாமே உம்மை குணமாக்கும் ஆண்டவர் என்ற இறைவாத்தைக்கு ஏற்ப  எம் மனித சமுதாயத்தை உம் இரக்கத்தினால் தொட்டு குணமளிக்க  வேண்டுமென்று  பொதுநிலையினர் ஞாயிறு ஆன இன்று  புனித தாமஸ்மூர் வழியாக  இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. எம் இறைவா! எம் வாழ்வில்  நாங்கள் சந்தித்த அனைத்து போராட்டங்களும், படும் வேதனைகளும் எதிர்காலத்தில் எமக்கு கிடைக்கும் வெற்றிவாகை என்பதைனை உணர்ந்து குடும்பவாழ்வில் தனிமை, வருத்தம், நெருக்கடி, தோல்வி, வேதனை இவைகளிலிருந்து மீண்டும் எழுந்திட குடும்பத்த்தில் அன்பும் ஒற்றுமையும் தழைத்து ஓங்க  வேண்டுமென்று பொதுநிலையினர் ஞாயிறு ஆன இன்று  புனித தாமஸ்மூர் வழியாக இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


Thursday, June 16, 2016

பொதுக்காலம் ஆண்டின் 12ஆம் ஞாயிறு 19/06/2016


இன்றைய நற்செய்தி வாசகங்கள்.



I. செக் 12:10-11
II. கலாத்தியர் 3:26-29
III. லூக் 9:18-24

திருப்பலி முன்னுரை:


நான் யார்? என்று இறைமகன் இயேசு கேட்ட கேள்விக்கு விடை அறிய ஆவலுடன் நம் ஆலயத்தில் குழுமியிருக்கும் இறைமக்களாகிய உங்களை பொதுக்காலம் ஆண்டின் 12ஆம் ஞாயிறைக் கொண்டாட அன்புடன் வரவேற்கின்றோம்.

நாம் எப்படி இருக்கிறோமோ, அப்படித்தான் மற்றவர்களையும், மற்றவைகளையும் பார்க்கின்றோம் அல்லது நாம் மற்றவர்களையும், மற்றவைகளையும் பார்க்கும் விதத்தை வைத்து நாம் எத்தகையவர்கள் என்பதை அறிந்து கொள்ளலாம் அல்லவா! நாம் கடவுளைப் பார்க்கும் விதமும் அப்படியே. கடவுளை சிலர் பாசமிகு தந்தையாகவும், தம்மேல் கரிசனைக் கொண்ட  தாயாகவும், உற்ற நண்பனாகவும், உடனிருக்கும் சகோதரனாகவும், சோதனை நேரங்களிலும்,நாம் தோற்றுப்போகும் நேரங்களில்  அவரை ஓர் எதிரியாகவும் பார்க்கிறோம். ஆனால் இவற்றால் கடவுளின் அன்பும் பரிவும் ஒருபோதும் நமக்குக் குறையாது என்பதே நிதர்சனம். ஏனெனில் கடவுளின் பார்வையில் நாம் அனைவருமே விலைஉயர்ந்தவர்களாய் தான் காணப்படுகிறோம்.

பவுல் கிறிஸ்தவர்கள் அனைவரும் கடவுளைத் தந்தையாகவும், தங்களை அவரின் பிள்ளைகளாகவும் கண்டுணர அழைக்கின்றார். இன்றைய வாசகங்களைக் கேட்டு நாம் கடவுளை எப்படி காண வேண்டும் என்பதற்காக
ஞானத்தையும், துன்பத்திலும் இன்பத்திலும் ஏற்றுக்கொள்ளும் நல்இதயத்தை பெற்றிட வேண்டி இத்திருப்பலிக் கொண்டாடங்களில் உளமாறப் பங்குக்கொண்டு செபிப்போம். நாம் பார்க்கும் கடவுள் நம்மைப் பார்க்கிறார்... நாம் பார்க்கும் அனைத்திலும் நம் கடவுளைப் பார்க்கிறோம்!



வாசக முன்னுரை:



முதல் வாசக முன்னுரை:


இன்றைய முதல் வாசகம் புலம்பலும், அழுகையும் நிறைந்திருக்கிறது. பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்ட யூதா மக்களின் வருங்கால மீட்பும், வளமும் பற்றி இறைவாக்குரைக்கும் செக்கரியா, 'அவர்கள் தாங்கள் ஊடுருவக் குத்தியவனையே உற்று நோக்குவார்கள்' என்கிறார். செக்கரியாவின் இவ்வார்த்தைகளை இயேசுவுக்குக் குறிப்பிட்டு எழுதும் நற்செய்தியாளர் யோவான், 'தாங்கள் ஊடுருவக் குத்தியவர்களை உற்று நோக்குவார்கள்' (யோவா 19:37) என்று மாற்றி எழுதுகின்றார்.  செக்கரியாவின் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இந்த வாசிகத்திற்குக்  கவனமுடன் செவிமெடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:


 இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுலடியார் கிறிஸ்தவர்கள் அனைவரும் கடவுளைத் தந்தையாகவும், தங்களைத் தாங்களே அவர்களின் பிள்ளைகளாகவும் கண்டுணர அழைக்கின்றார். கடவுளைத் தந்தையாகப் பார்க்கும் ஒருவர், தனக்கு அருகில் இருக்கும் அனைவரையும் ஒன்றாய்ப் பார்க்கின்றார். அதாவது, இவர்களுக்குள் எந்த வேறுபாடும் இல்லை. கடவுளின் மகன் அல்லது மகள் நான் என்னும் நிலை இவர்களோடு என்னை இணைக்கிறது. ஏனெனில் இவர்களும் கடவுளின் மகன்கள் மற்றும் மகள்கள். இந்த இணைப்பைச் சாத்தியமாக்குபவர் இயேசு என்று எடுத்துரைக்கும் இவ்வாசகத்தைக் கருத்துடன் செவிமெடுப்போம்.


 



பதிலுரைப் பாடல்



திபா 63: 1. 2-3. 4-5. 7-8

பல்லவி: கடவுளே! என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது.
கடவுளே! நீரே என் இறைவன்! உம்மையே நான் நாடுகின்றேன்;
என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது;நீரின்றி வறண்ட தரிசு நிலம்போல என் உடல் உமக்காக ஏங்குகின்றது. -பல்லவி

உம் ஆற்றலையும் மாட்சியையும் காண விழைந்து உம் தூயகம் வந்து உம்மை நோக்குகின்றேன். ஏனெனில், உமது பேரன்பு உயிரினும் மேலானது;
என் இதழ்கள் உம்மைப் புகழ்கின்றன. -பல்லவி

என் வாழ்க்கை முழுவதும் இவ்வண்ணமே உம்மைப் போற்றுவேன்;
கைகூப்பி உமது பெயரை ஏத்துவேன். அறுசுவை விருந்தில் நிறைவடைவதுபோல என் உயிர் நிறைவடையும்; என் வாய் மகிழ்ச்சிமிகு இதழ்களால் உம்மைப் போற்றும். -பல்லவி

ஏனெனில், நீர் எனக்குத் துணையாய் இருந்தீர்; உம் இறக்கைகளின் நிழலில் மகிழ்ந்து பாடுகின்றேன். நான் உம்மை உறுதியாகப் பற்றிக்கொண்டேன்;
உமது வலக்கை என்னை இறுகப் பிடித்துள்ளது. -பல்லவி


 

 மன்றாட்டுகள்:


1.  அன்புத் தந்தையே! எம் இறைவா!  திருஅவையினை உம்பாதம் வைக்கிறோம். திருஅவை தன் இயல்பில் செயல்படவும் திருஅவையின்  திருத்தந்தை முதல் அனைத்து துறவரவாழ்வில் தன்னை இணைத்துக் கொண்டவர்கள், இறைசிந்தையிலும், இறைவார்த்தைக்கு கீழ்படிந்து தன்னைதாழ்த்திக் கொண்ட தூய மரியாளைப் போல் திருஅவையை நல்முறையில் வழிநடத்திட தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.


2. அகில உலகை ஆண்டு நடத்தி வரும் எம் இறைவா! உலகில் உள்ள அனைத்து தலைவர்கள் தம்நாடு,மொழி, இனம், மதம்  இவைகளினால் வன்முறை கலாச்சாரங்களையும்,  மனிதர்களை மனிதர்களே அழிக்க கூடிய அனைத்து கண்டு பிடிப்புகளையும் விடுத்து,  மனித மாண்பை உயர்த்த  தேவையான தூய்மையான சிந்தனைகளை கொடுத்து, அனைத்து மக்களும் சமாதானம் மகிழ்ச்சி இவைகளை மக்களுக்கு பெற்றுத்தர, தேவையான ஞானத்தை பொழிந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


3இரக்கமும் பேரன்புமிக்க எம் இறைவா!  இன்றைய சமூகத்தில் நிலவும், குழந்தை தொழிலாளர்கள், கொத்தடிமைகளிலிருந்தும் வறுமையிலிருந்தும் விலகி வெளிவந்திடவும், மக்கள் தங்கள் சுயத்தையும், சமூக மதிப்பீடுகளையும், உறவுகளையும்  இழந்து நிற்கும் நிலைமாறி, உறவைப் போற்றி பேணி பாதுகாக்க கூடியவர்களாக மாற்றி நல் வாழவு வாழ வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


4. நல் ஆயனாம் எம்  இறைவா! நீர் இன்று நற்செய்தியின் வழியாக உம் சீடர்களிடம் உம்மை சுய ஆய்வு செய்தது போல, நாங்கள் அனைவரும் ஒவ்வொரு நாளும் எங்கள் சொல்லாலும் எங்கள் செயலாலும் செய்த தவறுகளை ஒருபொருட்டாக எண்ணாமல் பாவத்தைக் குறித்து மனவருத்தமற்ற இன்றைய சூழலில் ஒவ்வொரு நாளும் சுயஆய்வு செய்ய தேவையான ஆலோசனைகளை எங்களுக்கு நிறைவாக பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


5. நற்கருணையின் நாயகனே எம் இறைவா! திருவழிபாட்டின் மையம் நற்கருணை. இக்கொண்டாட்டத்தில் திருஅவையின்  மறைஉண்மைகளை எல்லாக் காலத்திலும் நாங்கள் மதிக்கவும், உம் திருஉணவை உட்கொள்ள தகுதியான நிலையில்  திருஉணவின் மேன்மையை புரிந்து கொண்டு தூய உள்ளத்துடன் இருக்கவும் உம் தூயஆவியின் வழியாக புது படைப்பாக மாறிட வரம் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

Wednesday, June 8, 2016

பொதுக்காலம் ஆண்டின் 11ஆம் ஞாயிறு 12/06/2016



பொதுக்காலம் ஆண்டின் 11ஆம் ஞாயிறு  12/06/2016


இன்றைய நற்செய்தி வாசகங்கள்.


திருப்பலி முன்னுரை:

இறைஇயேசுவில் அன்பார்ந்த மக்களே! நம் ஆலயத்தில் குழுமியிருக்கும் இறைமக்களாகிய உங்களை பொதுக்காலம் ஆண்டின் 11ஆம் ஞாயிறைக் கொண்டாட அன்புடன் வரவேற்கின்றோம்.
நம் கடவுள் நம் குற்றங்களுக்கு ஏற்பத் தண்டிப்பவர் அல்ல. மாறாக மன்னித்து நம்மை ஏற்றுக்கொள்ளும் மன்னிப்பின் இறைவன், இரக்கமே உருவான இறைவன் என்பதை நம் மனதில் ஆழமாகப் பதிய வைத்துப் அவரின் அருளைப் பெற வேண்டுமென்று இன்றைய வாசகங்கள் மூலம் நமக்கு அழைப்பு விடுக்கின்றார் இறைமகன் இயேசு .
 மன்னன் தாவீதுவிடம் நாத்தான்  அவர் செய்ய தவறுகளை எடுத்துயெம்பியபோது அவற்றை உணர்ந்து கடவுளிடம் மன்னிப்பு கேட்டார். வரவிருந்த கேடுகளிலிருந்து தப்பினார்.  தான் செய்த பாவங்களை இயேசுவின் காலடியில் கொட்டி மன்னப்பு பெற்ற பாவியான மாது புது பிறப்பாய் மகிழ்ச்சியுடன் சென்றாள்.
இறை இரக்க ஆண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் நாம் பிறருடைய குற்றம் குறைகளை மன்னித்து அவர்களை ஏற்று வாழும் இனிய பண்பை நாம் அனைவரும் இதயத்தில் கொண்டு வாழ இத்திருப்பலிக் கொண்டாடங்களில் உளமாறப் செபிப்போம். இறைஇரக்கத்தின் முகத்தைக் காண்போம்..

வாசக முன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

சாதாரண ஆடுமேய்ப்பவனாக இருந்த தாவீதை வலிமைமிக்க மன்னனாக மாற்றினார் இறைவன். எல்லா வளங்களையும் பெற்ற அவர் உரியாவின் மனைவியை  தனதாக்கிக் கொண்டார்.  இதன் மூலம் இறைவனுக்கு எதிராய் நடந்துக்கொண்டார். நாத்தான் அவர் செய்த தவறுகளை எடுத்துரைத்த போது தன் தவறுகளை உணர்ந்து மன்னிப்பு கேட்டார்.மன்னிப்பும் பெற்றார்.    இந்நிகழ்வை பதிவு செய்யும் இரண்டு சாமுவேல் நூலிலிருந்து வாசிக்க அதைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:

 இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுலடியாரின் புகழ் பெற்ற சொற்தொடராகிய இனி வாழ்பவன் நான் அல்ல. கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார். இறைமகன்  மீது கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் நான் இவ்வுலகில் வாழ்கிறேன்  என்பதைப் பற்றிய விளக்கம் அளிக்கின்றார்.  அதே வேளையில் சட்டம் சார்ந்த செயல்களால் ஒருவர் இறைவனுக்கு ஏற்புடையவராக ஆகமுடியாது என்று ஏடுத்துரைக்கும் இவ்வாசகத்தைக் கருத்துடன் செவிமெடுப்போம்.


பதிலுரைப் பாடல்

திபா 32: 1-2. 5. 7. 11

பல்லவி: ஆண்டவரே, என் நெறிகேட்டையும் பாவத்தையும் போக்கினீர்.
 
எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ, எவரது பாவம் மறைக்கப் பட்டதோ, அவர் பேறுபெற்றவர்.  ஆண்டவர் எந்த மனிதரின் தீச்செயலை எண்ணவில்லையோ, எவரது மனத்தில் வஞ்சம் இல்லையோ, அவர் பேறுபெற்றவர். -பல்லவி
என் பாவத்தை உம்மிடம் அறிக்கையிட்டேன்; என் தீச்செயலை நான் மறைத்ததில்லை;
ஆண்டவரிடம் என் குற்றங்களை ஒப்புக் கொள்வேன்' என்று சொன்னேன். நீரும் என் நெறிகேட்டையும் பாவத்தையும் போக்கினீர். -பல்லவி
நீரே எனக்குப் புகலிடம்; இன்னலினின்று என்னை நீர் பாதுகாக்கின்றீர்;  உம் மீட்பினால் எழும் ஆரவாரம் என்னைச் சூழ்ந்தொலிக்கச் செய்கின்றீர். -பல்லவி
 நீதிமான்களே, ஆண்டவரை முன்னிட்டு அகமகிழுங்கள்;  நேரிய உள்ளத்தோரே, நீங்கள் அனைவரும் மகிழ்ந்து பாடுங்கள். -பல்லவி


 மன்றாட்டுகள்:

1.  அன்புத் தந்தையே! எம் இறைவா!  இன்றைய சூழலில் திருஅவை எதிர்கொள்ளும் அனைத்து சவால்களை கிறிஸ்துவின் மதிப்பீடுகளுக்கு ஏற்ற அன்பின் பாதையில் வழிநடந்து செல்லும் எம் திருத்தந்தை, ஆயர்கள், அருட்பணியாளர்கள், துறவியர்கள், பொதுநிலையினர் ஆகிய  அனைவரும் காலத்தின்   அறிகுறிகளுக்கு ஏற்ப இறைவார்த்தையின் ஒளியில் திரு அவையை முன் நின்று நடத்திச் செல்ல தேவையான வரங்களை  பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

2. திருவழிப்பாட்டின் நாயகனே! எம் இறைவா! திருப்பலி வெறும் வேடிக்கையாக நடைபெறும் நிகழ்வாக  அல்லாமல்,  இறைமக்கள் வாடிக்கையாக வருவது ஒரு பழக்கமாக மாறிவிட்ட இன்றைய சூழலில் இருபால் துறவியரும், பொதுநிலையினரும், திருவழிப்பாட்டின் மேன்மையை உணர்ந்து பலியில் பங்கேற்பாளர்களாக, கிறிஸ்து இயேசுவின்  சாட்சிகளாக திகழ தேவையான உமது இரக்கத்தின் ஆவியை பொழிய வேண்டி இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3 மனமாற்றத்தின் நாயகனே எம்  இறைவா!   பாவிகள் மனம் திரும்ப வேண்டுமென நீர் விரும்புகின்றீர். பாவிகளில் முதன்மையான பாவி நான் என்று தன்னை தாழ்த்திக் கொண்ட  தூய பவுல் போல நாங்கள் பிறருக்கும், உறவுக்கும், சமூகத்திற்கும் திருச்சபைக்கும் எதிராக செய்த குற்றங்களை நீர் மன்னித்து புது படைப்பாக எங்களை மாற்றியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4
. உறவின் ஊற்றாகிய இறைவா! இன்றைய சூழலில் கிறிஸ்துவத்திற்கு எதிராக எழுப்பப்படும் அநீதிகள், வன்முறைகள், கொலைகள் , தீவிரவாத செயல்கள் இவை அத்தனையும் உமது கருணைமிகு இரக்கத்தால் அனைவரும் உண்மையை உணர்ந்து அனைத்து மாந்தரும் ஒற்றுமையோடும்,  நீதி, நேர்மையோடும், ஒருவர் ஒருவரை புரிந்து கொண்டு மனித மாண்புகள் செழித்தோங்க வேண்டுமென்று  இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.