Monday, February 27, 2017

திருநீற்றுப் புதன் 01.03.2017

திருநீற்றுப் புதன் - முதல் ஆண்டு  01.03.2017




இன்றைய வாசகங்கள்

யோவேல்2:12-18
2 கொரி 5:20-6:2
மத்தேய 6:1-,16-18


திருப்பலி முன்னுரை


    ஒப்பில்லா ஆன்ம மீட்பிற்கு நம்மை ஏற்புடையவர்களாக மாற்றுவதும், உன்னதத் தேவனோடு ஒன்றித்து உறவாட நம்மைத் தூண்டுவதுமானத் தவக்காலத்தின் தொடக்க நாள் இன்று. ஆசீர்வாதமான இந்நாட்களில் நாம் ஆவிதரித்து வாழ்ந்து கொண்டிருப்பது அனைத்தும் வல்லவரின் அளவிடற்கரியக் கருணையாலேயே! இன்றைய நிகழ்வுகளும், வாசிக்கப்படும் வாசகங்களும், இசைக்கும் பாடல்களும் நிலத்திடை நம் வாழ்வு நிலையற்றது என்ற நினைவூட்டலைப் புரிந்து, ‘மனிதனே, நீ மண்ணாய் இருக்கின்றாய் - மண்ணுக்குத் திரும்புவாய்” என்ற மகத்தான உண்மையை உள்ளத்தின் ஆழத்தில் ஊன்றிட முயல்வதாகக் காண்கின்றோம். எவை எவற்றை விண்ணகத்தந்தை மண்ணக மாந்தர்களாகிய நம்மிடமிருந்து எதிர்நோக்குகின்றார் என்பதை இறைவாக்கினர் யோவேலின் வழியாக அவரே கூறுவதை முதல் வாசகம் நமக்குச் சொல்லுகிறது. பெறற்கரியக் கொடையான மீட்பை நமதாக்கிக் கொள்ள நம்மை நாம் மனமாற்றத்திற்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதையும், அதற்கு உரியக் காலம் இந்தப்பொழுதே என்பதையும் உணர்த்துவதாகத் திருத்தூதர் தூய பவுலின் திருமுகத்திலிருந்து தரப்படும் இரண்டாம் வாசகத்தால் நாம் கற்பிக்கப்படுகிறோம். திருத்தூதர் தூய மத்தேயுவின் பதிவிலிருந்து இன்றைய நற்செய்தி நமக்குத் தரப்பட இருக்கின்றது. அதில் செய்யும் அறச்செயல்களுக்கு விளம்பரம் தேடுபவர்களாக நாம் இருந்துவிடக்கூடாது; புரியும் தானதர்மங்கள், ஏறெடுக்கும் இறைவேண்டல்கள், மேற்கொள்ளும் நோன்பு ஆகியன இறைத்தந்தை மட்டுமே அறியும் ஒன்றாக இருத்தல் அவசியம் என்ற இயேசுவின் வார்த்தைகளை நாம் செவியேற்க இருக்கின்றோம். குன்றா விசுவாசத்தோடு, மனம் ஒன்றி நாம் எழுப்பும் இறைவேண்டல்கள்; ஒப்புரவு அருட்சாதனத்தைத் தக்கவிதமாய்ப் பயன்படுத்தித் துப்புறவான உள்ளம்; வலக்கைப் புரிவதை இறைவன் அன்றி இடக்கை அறியாத நற்செயல்கள் ஆகிய இவற்றால் இறைதந்தையை மகிழ்விக்கவும், அதன் பலனாய் நிலைவாழ்வில் அவரை முகமுகமாயத் தரிசிக்கவும் இந்தத் திருப்பலியை ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம்.



முதல் வாசக முன்னுரை


    இறைவாக்கினர் யோவேல் வழியாக இறைவன் நம்மோடு பேசுவதையே நாம் இன்று முதல் வாசகமாகக் கேட்க இருக்கின்றோம். நெறி தவறி வாழ்பவர்களை ஆண் என்றும், பெண் என்றும் பாலினப் பாகுபாடு பார்க்காது, பழுத்த முதியோர் தொடங்கி, பச்சிளம் பாலகர்கள் வரை வயது வேறுபாடு பாராட்டாது, பரமதந்தை அழைக்கின்றார். ‘இப்போதாவது என்னிடம் திரும்பி வாருங்கள்” என்று. அவரிடம் திரும்பி வருவதற்கு எவை, எவற்றைக் கைநெகிழ வேண்டும் என்பதையும், எவை, எவற்றைக் கைக்கொள்ள வேண்டும் என்பதையும் பரம தந்தையே விரித்துரைக்கின்றார். எல்லை கடந்த அவரது அன்பும், இரக்கமும் திரும்பி வருவோருக்கு வழங்கப்படுவதை வாசகம் எடுத்துரைக்கின்றது. வாசிக்கக் கேட்போம். (யோவேல்.2:12-18)

இரண்டாம் வாசக முன்னுரை


    கிறிஸ்து இயேசுவின் தூதுவராய் திருத்தூதர் தூய பவுல், கொரிந்து நகர் விசுவாசிகளுக்கு விடுத்த வேண்டுகோளை நாம் இப்போது இரண்டாம் வாசகமாகச் செவியேற்க இருக்கின்றோம். பாவமாசு அனுகாதக் கிறிஸ்து இயேசுவை, பாவநிலைக்கு உட்படுத்தி, பரம தந்தை நம்மனைவருக்கும் அருளியிருக்கும் பெறற்கரியக் கொடைத் தான் மீட்பு. இத்தகைய ஒன்றினை நாம் இழந்துவிடக்கூடாது என்றும், நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நாட்களே மனமாற்றம் பெற்று, மீட்பிற்கான தகுதியை அடைய ஏற்றக் காலம் என்பதையும் நமக்கு வாசகம் எடுத்துரைக்கின்றது. செவியேற்பதோடு, விரைந்து செயல்படவும் முன்வருவோமாக. (2கொரி.5:20, 6:2)

விசுவாசிகளின் மன்றாட்டு


1) பரம தந்தையே - எம் இறைவா! பொதுநிலையினரான எங்களுக்கு ஆன்ம வழிகாட்டலைச் செய்து, ஞான நல்லுணர்வை ஊட்டவும், ஆலயத்திருப்பணி உள்ளிட்ட ஆன்மீகச் செயல்பாடுகளை அர்ப்பணிப்போடு ஆற்றவும், உம்மால் முன் குறிக்கப்பட்ட எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், அருட்கன்னியர்கள் மற்றுமுள்ள துறவியர்களின் ஆன்ம, உடல் உள்ள நலன்கள் ஆசீர்வதிக்கப்பட நாங்கள் ஆசிக்கின்றோம். ஞானம் மற்றும் நல்லறிவுடன் கூடிய விழிப்புணர்வு இவர்களுக்கு அருளப்படவும், இவர் தம் இறை உறவும், உடன்படிக்கையும் வலுப்பெறவும், இவர்கள் எதிர்கொள்ளும் தீமைகள், இன்னல்கள், இக்கட்டுகள், இடையூறுகள் வலுவிழந்து உடைபடவும் வரம் தந்திட இறைவா! உம்மை மன்றாடுகிறோம்.

2) பரம தந்தையே - எம் இறைவா! ஆன்மீக விடுதலைக்கான அருகதையை நாங்கள் அடைந்திடவும், அன்பா; இயேசுவின் அருமை நண்பர்களாய் ஆனந்தத்தில் திளைத்திடவும் ஆசிக்கின்றோம். இறைச்சட்டம் கூறும் நெறிமுறைகளை அப்பழுக்கின்றிக் கடைபிடித்து ஒழுகவும், ஒப்புரவு அருட்சாதனத்தைத் தக்கவிதமாய்ப் பயன்படுத்தித் தூயவராய் துலங்கிடவும், விலை மதிப்பில்லா விடுதலையின் மக்களாக விளங்கிடவும் வரமருள - இறைவா! உம்மை மன்றாடுகிறோம். (யோவான்.8:31:32)

3) பரம தந்தையே - எம் இறைவா! நாங்கள் எங்கள் உயிரைக் காத்துக்கொள்ளவும், உரிமை வாழ்வின் உறுப்பினர்களாகும் தகுதியைப் பெற்றுக்கொள்ளவும், உன்னதர் இயேசுவைச் சார்ந்தவர்களாய் எண்ணப்படவும் ஆசிக்கின்றோம். எங்கள் ஆவல் செயல்வடிவம் பெற நாங்கள் தத்தம் சிலுவைகளை நித்தம், நித்தம் முறைப்பாடினின்றிச் சுமந்து இறைமகன் இயேசுவை பின்பற்றும் கருணையை வழங்கிடக் கோரி, இறைவா! உம்மை மன்றாடுகிறோம். (மத்.10:38-39)

4) பரம தந்தையே - எம் இறைவா! இருள் அகன்ற நண்பகலாய் எங்கள் வாழ்வு ஒளிரிந்திடவும், இயேசுவின் அடித்தடங்களைப் பின்தொடரும் அன்பர்களாய் நாங்கள் மிளிர்ந்திடவும், வறண்ட நிலை அகன்று, எம்மில் ஆன்மீக வளம் பெருகிடவும் ஆசிக்கின்றோம். பசித்திருப்போரிடத்து நாங்கள் காட்டும் பரிவாலும், வறியவர்களிடத்து நாங்கள் கொள்ளும் வாஞ்சையாலும், வாழ்வளிக்கும் இறைவார்த்தைகளை நாளும் நாங்கள் வாசித்துத் தியானிக்கும் வழக்கத்தாலும் பிறரன்பு எம்மில் பெரிதும் சுடர்விடும் வரம் கேட்டு, இறைவா! உம்மை மன்றாடுகிறோம். (எசாயா.58:10-11)

5)  பரம தந்தையே - எம் இறைவா!  தாம் செய்தது போல நாங்களும் செயல்படுமாறு உம் திருமகனும், எங்கள் மீட்பருமான கிறிஸ்து இயேசு பல்வேறு முன்மாதிரிகைகளை எங்களுக்கு தந்துள்ளார். அவற்றைக் கடைபிடித்து எங்கள் வாழ்வில் நாங்கள் கிறிஸ்துவை பிரதிபலிக்க வேண்டுமென்று பெரிதும் ஆசிக்கின்றோம். பாலைவெளியில் தம்மைப் பின்தொடர்ந்து வந்தவர்களின் பசியைப் போக்கிய இயேசுவின் பரிவு - கல்லெறிந்து கொல்லப்படயிருந்த பெண்ணை காப்பாற்றி மன்னித்த இயேசுவின் கருணை சீடர்களின் பாதங்களைக் கழுவுவதற்காகத் தம்மை தரை மட்டும் தாழ்த்திய அவரின் தாழ்ச்சி - சிறைபடவும், வதையுறவும் தம்மை முழுமையாய் அரிப்பணித்த தியாகம் - சிலுவைச் சாவிற்கு காரணமான அத்தனை பேர்களையும் மன்னித்த மாண்பு - அவர்கள் பொருட்டு பரமதந்தையிடம் சமர்ப்பித்த மன்றாட்டு. இயேசுவின் இத்தகு அரிய பண்புகளை நித்தமும் தியானிப்பவர்களாய் நாம் வாழ்ந்து, அதன் பயனாய் உண்மையும், உத்தமுமான கிறிஸ்தவனாக, கிறிஸ்தவளாக வாழும் வரம் கேட்டு, இறைவா! உம்மை மன்றாடுகிறோம்.




எழுதியவர் திரு எம்.எம். லூயிஸ்

No comments:

Post a Comment