Thursday, April 27, 2017

பாஸ்கா காலம் மூன்றாம் ஞாயிறு 30.04.2017

*பாஸ்கா காலம்  மூன்றாம் ஞாயிறு  30.04.2017*


*இன்றைய நற்செய்தி வாசகங்கள்*


திருத்தூதர் பணிகள் 2:14,22-33
1 பேதுரு 1:17-21
லூக்கா 24:13-35


*முன்னுரை*


அன்புடையீர்,
உயிர்ப்பின் காலம் மூன்றாம் ஞாயிறான இன்று எம்மாவு சீடர்களைப் போல உயிர்த்த இயேசுவுடன் வழி நடந்து இத்திருப்பலியில் பங்கேற்க நம் ஆலயம் வந்துள்ள இயேசுவின் அன்புச்சீடர்களாகிய இறைமக்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுயில் நம்பிக்கைக் கொள்ளவும், அவரின் சாட்சியாக இவ்வுலகில் வலம் வரவும் நம்மை அழைக்கின்றது. எம்மாவு சீடர்கள் போல் வாழ்வில் நம்பிக்கை இழந்தவர்களாக வாழாமல், இறைநம்பிக்கையே நம் வாழ்வு என்பதை உணர்ந்திட வேண்டும். மனிதன் சுவாசிப்பதால் மட்டும் உயிர் வாழவதில்லை. மாறாக அவன் நம்பிக்கையைச் சுவாசிப்பதாலும் உயிர் வாழ்கிறான்.
எம்மாவு சீடர்களுடன் பந்தியமர்ந்தப் போது அங்கிருந்த அப்பத்தை எடுத்து ஆசீர்வதித்துப் பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார். அப்போது அவர்கள் கண்கள் கண்டு கொண்டன. இயேசு எப்போதும் நம்மிடம் இருப்பதை ஆசீர்வதித்து நம்மைத் தன் நலன்களால் நிரப்பிக்கூடியவர். எனவே, குடும்பமாக இணைந்து இயேசுவிடம் “எங்களோடு தங்கும்” என அவரை மன்றாடி நம் வாழ்வில் எந்நிலையிலும் நம்பிக்கை இழக்காமல் இருக்கும் வரத்தை இத்திருப்பலியில் உயிர்த்த இயேசுவிடம் மன்றாடுவோம். வாரீர்.

*வாசகமுன்னுரை*


*முதல் வாசக முன்னுரை*


இறைமகனால் திடப்பட்டுத்தப்பட்டுத் தூயஆவியால் அருட்பொழிவுசெய்யப்பட்ட சீடர்கள் உயிர்த்த இயேசுவின் சாட்சிகளாக எருசலேம் நகரத்தில் வாழும் இஸ்ரயேல் மக்கள் முன்னிலையில் இறைமகனின் உயிர்ப்பின் மகிமைக்கும் மகிழ்ச்சிக்கும் தாங்களே போதுமானச் சாட்சிகள் என்று ஆணித்தரமாகப் பதிவுச் செய்கின்றனர். பேதுருவின் வீறுக்கொண்ட இந்தச் சொற்பொழிவைக் கவனமுடன் கேட்டு உயிர்த்த இயேசுவின் மீது நமக்குள் விசுவாசத்தை உறுதிபடுத்திக்கொள்ள இன்றைய முதல் வாசகம் நம்மை அழைக்கின்றது. இவ்வாசகத்திற்குக் கவனமுடன் கேட்போம்.

*இரண்டாம் வாசக முன்னுரை*


வானகத்தந்தை ஆளைப் பார்த்துத் தீர்ப்பு வழங்குவதில்லை மாறாக அவரவர் செயல்களின்படி தீர்ப்பு வழங்குவார். இறையச்சத்தோடு வாழ அழைக்கிறார். மாசு மறுவற்ற ஆட்டுக்குட்டியைப் போன்ற இயேசுவின் விலையில்லாத இரத்ததால் நமக்கு மீட்பு கிடைத்தது. இறந்த அவரை உயிர்ப்பிக்கச் செய்து பெருமைப்படுத்தினார். இதனால் நாம் இயேசுகிறிஸ்துவை எதிர்நோக்கி இருக்க அழைப்பு விடுக்கும் இன்றைய இரண்டாம் வாசகத்தைக் கவனமுடன் உள்ளத்தில் பதிவு செய்வோம்.

*பதிலுரைப்பாடல் *


*ஆண்டவரே வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்*
திருப்பாடல் 16:1-2, 5,  7-8, 9-10, 11

இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.  நான் ஆண்டவரிடம் 'நீரே என் தலைவர்; உம்மையன்றி வேறு செல்வம் எனக்கு இல்லை' என்று சொன்னேன். ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே. *பல்லவி*

எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்; இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது. ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன். *பல்லவி*

என் இதயம் அக்களிக்கின்றது; என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது; என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும். ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்பவிக்கமாட்டீர்; உம் அன்பனைப் படுகுழியைக் காண விடமாட்டீர். *பல்லவி*

வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர். உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு. உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு. *பல்லவி*



*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*


அல்லேலூயா, அல்லேலூயா! வழியிலே அவர் நம்மோடு பேசி, மறைநூலை விளக்கும்போது நம் உள்ளம் பற்றி எரியவில்லையா அல்லேலூயா

*மன்றாட்டுகள்*


1 உம் வார்த்தைகளால் எம் உள்ளத்தைத் திறந்த எம் இறைவா! திருஅவை உள்ளத் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் மற்றும் பொதுநிலையினர் ஆகிய அனைவரின் உள்ளங்கள்  இறைவார்த்தையால் பற்றி எரியவும், திருப்பலி எனும் அருட்சாதனத்தால் இறைவனைக் கண்டு கொள்ளவும், அவரின் சாட்சிகளாக வளர வேண்டிய அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. உம்மைக் கண்டு கொள்ள எம் இதயத்தைத் திறந்த எம் இறைவா! எம் வாழ்வில் உம் வார்த்தைகளாலும், நீர் செய்யும் அற்புதங்களாலும் எங்கள் குடும்பத்திலுள்ள நாங்கள் அனைவரும் இறைநம்பிக்கை மேன்மேலும் வளரவும், எம்மாவு சீடர்களை வழி நடத்தி அவர்களுடன் தங்கியது போல எம் இல்லங்களில் தங்தி எங்களுக்கும் உம் ஆசீர் வழங்கிட வேண்டி இறைவா உமை மன்றாடுகிறோம்.

3.உம் வார்த்தைகளால் எம் உள்ளத்தைத் திறந்த எம் இறைவா! இயற்கை வளங்களை மாந்தர்களின் பேராசையால் அழித்த செயல்களுக்காக வருந்துகிறோம். மன்னிக்கும் தெய்வமே மீண்டும் எங்களுக்கு நல்ல மழைப் பொழிவித்து வாழ்வின் எல்லைக்கோட்டிற்குத் தள்ளப்பட்ட எம் ஏழை எளியமாந்தர்களின் வாழ்வாதாரங்கள் மேன்மைபடவும், வெப்பத்தின் தாக்கத்திலிருந்து அனைவரையும் காத்திடவும் அருள்மாரிப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4 உம்மைக் கண்டு கொள்ள எம் இதயத்தைத் திறந்த எம் இறைவா! தமிழகம் முழுவதும் விடுமுறை காலப் பள்ளியில் பங்குகொண்ட எம் பிள்ளைகளின் இதயத்தில் இறையச்சத்தையும், இறைவார்த்தைகளையும் அளித்து, அவர்களுடன் என்றும் தங்கி வழி நடத்தவும், இப்பணிக்காய் உழைத்த அனைத்து நல்ல உள்ளங்களையும் நீர் நிறைவாய் ஆசீர்வதித்து எம் இளையசமுதாயம் உம்மைவிட்டுவிலகாமல் இருக்க வேண்டிய வரங்களைத் தருமாறு இறைவா உமை மன்றாடுகின்றோம்.
                                  

www.anbinmadal.org


Thursday, April 20, 2017

பாஸ்கா காலம் இரண்டாம் ஞாயிறு 23.04.2017

*பாஸ்கா காலம் இரண்டாம் ஞாயிறு 23.04.2017*




*இன்றைய நற்செய்தி வாசகங்கள்*


திருத்தூதர்பணிகள் 2:24-47

1பேதுரு 1:3-9
யோவான் 20:19-31


*முன்னுரை*


அன்புடையீர்,
பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிறும் இறைஇரக்கத்தின் ஞாயிறுமான இன்று உள்ளத்தில் எழும் ஐயங்கள் நீங்கி இறைமகன் இயேசுவின் உயிர்ப்பின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள ஆலயம் வந்துள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
இன்றைய வாசகங்கள் இறைவனிடம் நம்பிக்கைக் கொள்ளவும், பகிர்ந்து வாழ்ந்திடவும் நம்மை அழைக்கின்றது. இயேசுவின் வார்த்தைகளை அருகிலிருந்து கேட்டுணர்ந்தச் சீடர்கள் யூதர்களுக்குப் பயந்து நடுங்கி முடங்கிக் கிடந்தபோது, மகதலா மரியா இயேசுவின் உயிர்ப்பின் செய்தியை அறிவித்தும்,  நம்பிக்கையில்லாக் கோழைகளாக இருந்த தம் சீடர்களைக் காண, அவர்களைத் தேற்ற, இயேசு அவர்கள் முன் தோன்றித் தன் சமாதானத்தை அளிக்கின்றார். இரக்கத்தின் தேவனாகிய இயேசு அவர்களின் தவறுகளை மன்னித்து அவர்களை ஏற்றுக்கொண்டு நம்பிக்கை ஒளியை ஏற்றி தான் இரக்கத்தின் தேவன் என்பதை உணர செய்தார். தோமாவின் ஐயம் களையப்பட்டபோது உயிர்ப்புக்கு அடித்தளம் கிடைத்தது. அவர் அவரோடு தன்னை இணைத்துக்கொண்டார். இறுதி மூச்சுவரை அவருக்காய் சாட்சி பகிர்ந்திடும் உறுதியான உள்ளத்தின் உந்துத்தால் நம் இந்திய நாட்டில் இறைசாட்சியாக மரிக்க முடிந்தது.
ஐயம் தவித்து நம்பிக்கைக் கொண்டவர்களாய், அச்சம் நீங்கி ஆனந்தம் அடைந்தவர்களாய், கண்டவர்களை விட காணாமல் நம்புகிறவர்களாய், பகிர்ந்துண்டு வாழும் நல்லெண்ணங்கள் கொண்டவர்களாய், இறைஇரக்கத்தைப் பெற்றவர்களாய் வாழ்ந்திட சமாதானத்தின் தேவனாம் உயிர்த்த ஆண்டவரிடம் இத்திருப்பலி வழியாக மன்றாடுவோம்.

*வாசகமுன்னுரை*



*முதல் வாசக முன்னுரை*

நம்மில் விசுவாசம் இருப்பதைப் பகிர்ந்துகொள்ளத் திருத்தூதர்பணிகள் நூலிலிருந்து வரும் இன்றைய முதல் வாசகம் எடுத்துக்காட்டுகிறது. ஆதிகிறிஸ்தவர்கள் திருத்தூதர்களின் போதனைகளுக்குச் செவிமெடுத்தார்கள். கூடிச் செபித்தார்கள். அப்பத்தைப் பிட்பதிலும் இறை வேண்டலிலும் உறுதியாக இருந்தார்கள் தங்கள் உடமைகளை விற்று அனைவருக்கும் அவரவர் தேவைகளுக்கு ஏற்ப  பகிர்ந்தளித்தனர். பகிர்வதே கிறிஸ்துவ வாழ்வு என்று வலியுறுத்தும் இவ்வாசகத்திற்குக் கவனமுடன் கேட்போம்.

*இரண்டாம் வாசக முன்னுரை*

உயிர்ப்பு அனுபவம் ஆதி கிறிஸ்தவர்களின் தனிநபர் அனுபவமாக மட்டும் இல்லாமல், அது அவர்களின் குழுவாழ்விலும் செயல்வடிவம் பெற்றது. ஆகையால்தான், 'திருத்தூதர் கற்பித்தவற்றிலும், நட்புறவிலும், அப்பம் பிடுவதிலும், இறைவேண்டலிலும் அவர்கள் உறுதியாய் நிலைத்திருந்தனர். இதனால் அவர்கள் பொன் போன்று புடமிடப்பட்டார்கள். எனினும் நம்பிக்கைக் கொண்டு சொல்லொண்ணா, ஒப்பற்ற மகிழ்ச்சியடைந்து பேருவகை கொள்கிறீர்கள் என்று எடுத்துக்காட்டும்  பேதுரு எழுதிய இன்றைய இரண்டாம் வாசகம் நம்பிக்கையின் குறிக்கோளான ஆன்ம மீட்பை பெறுக்கொள்ள அழைக்கின்றது.

*பதிலுரைப்பாடல்*

*ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.*

*திருப்பாடல் 118:2-4, 13-15, 22-24*


என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக! `என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என ஆரோனின் குடும்பத்தார் சாற்றுவார்களாக! `என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என ஆண்டவருக்கு அஞ்சுவோர் அனைவரும் சாற்றுவார்களாக! *பல்லவி*
அவர்கள் என்னை வலுவுடன் தள்ளி வீழ்த்த முயன்றனர்; ஆனால், ஆண்டவர் எனக்குத் துணை நின்றார். ஆண்டவரே என் ஆற்றல்; என் பாடல்; என் மீட்பும் அவரே. நீதிமான்களின் கூடாரங்களில் வெற்றியின் மகிழ்ச்சிக் குரல் ஒலிக்கின்றது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது. *பல்லவி*
கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று! ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். *பாஸ்கா காலம் இரண்டாம் ஞாயிறு 23.04.2017*

*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*


அல்லேலூயா, அல்லேலூயா! தோமா, என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்'' என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா

*மன்றாட்டுகள்*

1. ஐயங்கள் நீக்கி எம்மை அன்பால் ஒன்றிணைக்கும் அமைதியின் இறைவா! திருத்தந்தை, உடன் உழைக்கும் அனைத்து ஆயர்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய அனைவரும் உம் உயிர்ப்பின் மகிமையையும், மகிழ்ச்சியையும், அமைதியையும் முழுமையாகப் பெற்று தோமாவைப் போல் துணிவுடன் இறையரசை அறிவிக்க, இணைந்து செயல்படத் தேவையான இறைஅருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம். 


2. ஐயங்கள் நீக்கி எம்மை அன்பால் ஒன்றிணைக்கும் அமைதியின் இறைவா! பாஸ்கா காலத்தில் எங்கள் குடும்பங்களுக்கு உமது உயிர்ப்பின் பலனான அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பகிர்ந்து வாழும் நல்மனம் ஆகியவற்றை நிறைவாய் பொழிந்து, எங்கள் குடும்பங்களில் உமது துணையாளரின் அருளால் உறவுகள் மேன்பட்டு, வரவிருக்கும் நாட்களில் எங்கள் குடும்ப ஒற்றுமையால் உயர்ந்திடவும் சாட்சிய வாழ்வு வாழவும் உமது இரக்கத்தை அருள இறைவா உம்மை மன்றாடுகிறோம். 


3. ஐயங்கள் நீக்கி எம்மை அன்பால் ஒன்றிணைக்கும் அமைதியின் இறைவா! வாழ்வில் நம்பிக்கை இழந்த எம் விவசாயபெருமக்களின் வாழ்வாதரங்கள் சிறப்படையவும், அவர்கள் மனித நேயத்துடன் நடத்துப்படவும், இயற்கை வளங்கள் காக்கப்படவும் தேவையான அரசியல் ஞானத்தை எம் ஆட்சியாளர்களுக்குக் கொடுத்து, உமது அன்பின் விழுமியங்கள் வெற்றிபெறத் தேவையான உமது இரக்கத்தைப் பொழிந்து, அவர்கள் மனம் மாறிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம். 


4. ஐயங்கள் நீக்கி எம்மை அன்பால் ஒன்றிணைக்கும் அமைதியின் இறைவா! இன்று திருச்சபைக் கொண்டாடும் இறைஇரக்கத்தின் நாளின் பொருளுணர்ந்திடவும், உலகில் குறைந்துகொண்டேபோகும் சகிப்புத்தன்மை உமது இரக்கத்தால் உயர்ந்திடவும், உலகமாந்தர்கள் அனைவரும் தமக்கடுத்திருப்போரை அன்பு செய்து, நீர் கொடுத்த அமைதிப் பகிர்ந்திடும் நலமனம் கொண் டவர்களாய் வாழ்ந்திட உமது பேரிரக்கத்தை இறைஇரக்கத்தின் தினமான இன்று எங்களுக்குப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.  
                                
www.anbinmadal.org

Tuesday, April 4, 2017

குருத்து ஞாயிறு 09.04.2017



*இன்றைய நற்செய்தி வாசகங்கள்*


எசாயா 50:4-7
பிலிப்பியர் 2:6-11
மத்தேயு 26:14-27:66


*முன்னுரை*


அன்புடையீா,
தவக்காலத்தின் கடைசி ஞாயிறும் குருத்து ஞாயிறுமான இன்று குருத்தோலைகள் ஏந்தி பவனியாக ஆலயம் வந்துள்ள உங்கள் அனைவரையும் எருசலேம் நகரவீதிகளில் மகத்தான தலைவனாகத் தாவீதின் மைந்தனாய் வலம் வந்த இறைமகன் இயேசுவின் இனிய நாமத்தில் அன்புடன் வரவேற்கிறோம்.
முதல் குருத்து ஞாயிறு அன்று நடந்த போது சூறாவளி ஒன்று எருசலேம் நகரைத் தாக்கியது. காற்று வடிவில் வந்த சூறாவளி அல்ல, கடவுள் வடிவில் , கடவுளின் திருமகன் வடிவில் வந்த சூறாவளி. இயேசு எருசலேமில் நுழைந்தபோது, மக்களால் எதேச்சையாக, மானசீகமாக ஊர்வலம் தானாகவே ஏற்பட்டது. இயேசு தன் பணிவாழ்வைத் தொடங்கியது முதல் யூதமத் தலைவர்களின் அதிகார வாழ்வு ஆட்டம் கண்டது. இந்தத் தலைகீழ் மாற்றங்களின் உச்சக்கட்டம்.. எருசலேம் நகரில் இயேசு ஊர்வலமாய் வந்தது. அந்த மதக் குருக்களின் அரணாக இருந்த எருசலேம் கோவிலில் நுழைந்து, அங்கிருந்த அமைப்பையும் தலைகீழாக்கினார். எனவே இந்தக் குருத்து ஞாயிறு, அதிகார அமைப்புகளைப் பல வழிகளிலும் புரட்டிப் போட்ட ஒரு சூறாவளி தானே!
தந்தையாம் கடவுளின் மீது அவருக்கு இருந்த நம்பிக்கை தான் சிலுவைப் பாதையில் பயணிக்க இயேசுவிற்கு எழுச்சியைத் தந்தது. நாமும் இயேசுவின் மீது நம்பிக்கைகொண்டும் நம் அன்றாடச் சிலுவைகளைத் தாங்கி இயேசுவைப் பின்தொடர்வோம். பாடுகளின் வழியாக உயிர்ப்பின் ஒளியைப் பெற இப்புனித வாரத்தில் உருக்கமாக வேண்டுவோம்.

*வாசகமுன்னுரை*



*முதல் வாசக முன்னுரை*


எசாயா நூலிலிருந்து வரும் துன்புறும் ஊழியனின் பாடல் தான் இன்றைய முதல் வாசகம். இதில் துன்புறும் ஊழியன், துன்பங்களின் வழியாக உறுதிப்படுத்தப்படுகின்றார். தன்னைத் துன்புறுத்துவோரைக் கண்டு மறைந்துக் கொள்ளவில்லை. மாறாகத் தன்னை முழுமையாக அர்ப்பணிக்கின்றார். தந்தை தன்னைக் கைவிடாமாட்டார் என்று ஆழ்ந்த நம்பிக்கையே இதற்குக் காரணம். இயேசுவைப் போல் நாமும் அவரில் நம்பிக்கைக் கொண்டு மனம் மாறிட இவ்வாசகத்திற்குக் கவனமுடன் கேட்போம்.

*இரண்டாம் வாசக முன்னுரை*


இன்றைய இரண்டாம் வாசகம் பிலிப்பிய மக்களுக்கு எழுதப்பட்ட ஒன்றாகும். இதில் அவர்களிடையே காணப்பட்ட போட்டிகளும், ஆணவபோக்கிற்கும் மாற்றுச் செய்தியாக இறைமகனின் மகிழ்ச்சியை முன்வைக்கப்படுகிறது. இயேசு கடவுளாயிருந்தாலும், எவ்வாறு தன்னையே ஒரு அடிமையின் நிலைக்குத் தாழ்த்தினாரோ, அதைப்போல் கிறிஸ்தவர்களும் தாழ்ச்சியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று நமக்கு அழைப்பு விடுக்கின்றார் திருத்தூதர் பவுலடியார். இவ்வாசகத்தைக் கவனமுடன் உள்ளத்தில் பதிவு செய்வோம்.



பதிலுரைப்பாடல்

பல்லவி: என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?
திபா 22:7-8, 16-17, 18-19, 22-23


என்னைப் பார்ப்போர் எல்லாரும் ஏளனம் செய்கின்றனர்; உதட்டைப் பிதுக்கித் தலையசைத்து,`ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்தானே! அவர் இவனை மீட்கட்டும்; தாம் அன்புகூர்ந்த இவனை அவர் விடுவிக்கட்டும்' என்கின்றனர். பல்லவி
தீமை செய்வோரின் கூட்டம் என்னை வளைத்துக்கொண்டது; நாய்கள் என அவர்கள் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்; என் கைகளையும் கால்களையும் துளைத்தார்கள். என் எலும்புகளை எல்லாம் நான் எண்ணிவிடலாம் பல்லவி

என் ஆடைகளைத் தங்களிடையே பங்கிட்டுக்கொள்கின்றனர்; என் உடையின்மேல் சீட்டுப் போடுகின்றனர். நீரோ ஆண்டவரே! என்னை விட்டுத் தொலையில் போய் விடாதேயும்; என் வலிமையே! எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும். பல்லவி

உமது பெயரை என் சகோதரருக்கு அறிவிப்பேன்; சபை நடுவே உம்மைப் புகழ்ந்துப் பாடுவேன். ஆண்டவருக்கு அஞ்சுவோரே; அவரைப் புகழுங்கள்; யாக்கோபின் மரபினரே, அனைவரும் அவரை மாட்சிமைப்படுத்துங்கள்; இஸ்ரயேல் மரபினரே, அனைவரும் அவரைப் பணியுங்கள். பல்லவி

*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*


சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்.

*மன்றாட்டுகள்*


1. அருட்பெருக்கின் நாயகனே! எம் இறைவா! திருத்தந்தை, அவரோடு இணைந்து உடன் உழைக்கும் அனைத்து ஆயர்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய அனைவரும் உம் உயிர்ப்பின் மகிமையால் பலன் அளிக்கக் கூடியவர்களாகத் தொடர்ந்து பணி செய்திட, இயேசுவே ஆண்டவர் என்று முழுக்கமிட தேவையான இறைஅருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. நன்மைகளின் நாயகனே எம் இறைவா! வரவிருக்கும் இப்புனித வார நாட்களில் நாங்கள் எங்கள் பாவங்களையும், பலவீனத்தையும், குற்றங்குறைகளைக் களைந்து வழக்கமாக மேற்கொள்ளும் நிகழ்வாக உம் பாஸ்கா விழாவைக் கொண்டாடாமல், உள்ளத்தில் மாற்றம் நிறைந்தவர்களாகத் தூய மனதுடன் உம்மை அணுகி வர இறைவா உமை மன்றாடுகிறோம்.

3. ஏழைகளின் திருவுருவே எம் இறைவா! இந்த அருளிரக்க நாட்களில் தவமுயற்சிகளில் மட்டும் நாங்கள் கவனம் செலுத்தாமல் உள்ளத்தில் மனமாற்றமும், அதன் வெளிப்பாடாக, ஏழைகள் மட்டில் கவனம் செலுத்தி, அவர்களின் வாழ்வு சிறந்து விளங்கிட, அந்த மீட்புச் செயலின் வழியாக உம் சீடத்துவ வாழ்வில் அவர்களும் பங்கேற்கத் தேவையான மீட்பின் அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. அன்புத் தந்தையே எம் இறைவா! இன்று உலகலாவிய நவீன வளர்ச்சி என்ற பாதையில் வளர்ந்த நாடுகளின் பொருளாதாரத் தாக்கத்தில் சிக்கித் தவிக்கும், ஏழை நாடுகளில் வேலையில்லாத் திண்டாட்டம், பொருளதார நெருக்கடிகள் , ஊழல், இலஞ்சம், தீவிரவாத அச்சுறுத்தல்கள் இவைகளினால் வாழ்வை இழந்து தவிக்கும் ஏழை மக்களின் மீது உமது அளவு கடந்த இரக்கத்தினால், இத்தவக்கால அருள்வரங்களைப் பெறத் தேவையான உமது வல்லமையைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. மக்களின் நலன்களில் என்றும் அக்கறையுள்ள எம் இறைவா! விவசாயிகளின் தேவை இந்தத் தேசத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதையும், அவர்களின் எல்லா முயற்சிகளிலும் அரசு முன்னுரிமை கொடுத்து, எதிர்காலத் தலைமுறைகளுக்கு விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், விவசாயம் சிறப்புடன் நடைப்பெற நல்ல மழையைப் பொழிந்திட இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.




www.anbinmadal.org