Wednesday, September 20, 2017

பொதுக்காலம் ஆண்டின் 25ஆம் ஞாயிறு 24.09.2017

பொதுக்காலம் ஆண்டின் 25ஆம் ஞாயிறு  24.09.2017





*இன்றைய நற்செய்தி வாசகங்கள்*

 

எசாயா 55 6-9
பிலிப்பியர் 1 20-24,27
மத்தேயு 20 1-6

 *முன்னுரை*


அன்புடையீர்,   
இயேசுவின் அன்பிற்குரியவர்களே, பொதுக்காலத்தின் 24ம் ஞாயிறுத் திருப்பலியில் இறைவனின் நீதியையும், அன்பையும், தாராளக் குணத்தையும் அறிந்திட உங்களை அன்போடு வரவேற்கிறோம்.
இயேசுவின் எல்லா உவமைகளிலும் புரட்சியான கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன. பாரம்பரியம் என்ற பெயரில் சமுதாயம் கொண்டிருந்த தவறான எண்ணங்களைப் புரட்டிப் போடும் கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன. இந்த உவமையிலும் ‘புரட்டிப் போடுதல்’ நடந்துள்ளது. நமது எண்ணப்படி, அந்த முதலாளி யாருக்கு முதலில் கூலி கொடுத்திருக்க வேண்டும்? காலையிலிருந்து வேலைச் செய்தவர்களுக்கு முதலில் கூலி கொடுத்திருக்க வேண்டும். அதற்குப் பதிலாக, அவர் இறுதியாக வந்தவர்களுக்கு முதலில் கூலி கொடுக்கிறார். இந்த உவமையின் புரட்சி இங்கு ஆரம்பமாகிறது.
அவர்களுக்குப் பேசப்பட்ட ஒரு நாள் கூலியான ஒரு தெனாரியம் மட்டுமே கொடுக்கப்பட்டது. அத்தொழிலாளிகளின் கண்ணோட்டத்தில் இது அநியாயம், அக்கிரமம், அநீதி. ஆனால், முதலாளியின் கண்ணோட்டத்தில் இருந்து பார்த்தால், உழைத்த எந்தத் தொழிலாளியையும் அந்த முதலாளி ஏமாற்றவில்லை. அனைவருக்கும் நியாயமான, பேசப்பட்ட கூலியையே கொடுத்தார். இறுதியில் வந்தவர்களுக்கு நீதி, நியாயம் என்ற கணக்கையெல்லாம் தாண்டி, தாராளமாகக் கொடுத்தார். முதலாளி காட்டிய தாராளக் குணம், நீதி இரண்டையும் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை பணியாளர்களால்.
கடவுள் தனக்கே உரிய அழகுடன், தன் நீதியையும், அன்பையும், தாராளக் குணத்தையும் இணைத்து முடிவுகள் எடுக்கும்போது... இறுதியில் வந்தவர்களுக்கும் நமக்கு இணையான, அல்லது நம்மைவிட உயர்ந்த நன்மைகளைச் செய்யும்போது... நாம் ஏமாற்றம் அடைகிறோம். முணுமுணுக்கிறோம். கடவுள் நம் பக்கம் திரும்பி, "நான் கடவுளாய் இருப்பதால் உனக்குப் பொறாமையா?" என்று கேட்கிறார். நம் பதில் என்ன?
இறைவனின் நிபந்தனையற்ற அன்பு, குறைவின்றி வழங்கும் அவரது தாராளக் குணம், அதே நேரம், இறைவனின் நீதி இவைகளைப் பற்றி நாம் எண்ணிப் பார்த்து இத்திருப்பலியில் இறைவனிடம் அவரது அன்பையும் ,இரக்கத்தையும் மன்றாடுவோம்.


 

*வாசகமுன்னுரை*



*முதல் வாசக முன்னுரை*


இன்றைய முதல் வாசகம் இறைவார்த்தையின் வல்லமையை எடுத்துரைக்கின்றது. புற இனத்து அரசனின் ஆணையின்படி மக்கள் எருசலேமிற்குப் போவார்கள். எனவே, மக்கள் ஒவ்வொருவரும் வெளிப்படுத்தப்பட்ட இறைவார்த்தைக்குச் செவிமடுக்க வேண்டும். கடவுளுடைய ஞானத்தையும், நோக்கத்தையும், மனிதப் புத்தியைக் கொண்டு வரையறுக்க முடியாது. எனவே, நாடு கடத்தப்பட்ட மக்கள் இறைவனின் தாராள மனப்பான்மையைக் குறித்துக் கேள்வி கேட்கக்கூடாது. கடவுள் யாருக்கு என்ன ஆசீர்வாதம் கொடுக்க வேண்டுமோ அதை அவர்தான் முடிவு எடுப்பார். எனவே, கடவளின் வழிகள் மனிதப் புத்தியால் புரிந்து கொள்ள முடியாத ஒன்று. எசாயாவின் ஆறுதலின் நூலிலிருந்து வரும் இன்றைய முதல் வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.



.

*இரண்டாம் வாசக முன்னுரை*


தூய பவுல் பிலிப்பியர் சமூகத்திற்கு எழுதிய கடிதத்தில், கிறிஸ்துவில் மகிழ்ச்சியுற வலியுறுத்துகின்றார். தான் எவ்வாறு கிறிஸ்துவைப் பின்பற்றினாரோ, அதேபோல் ஒவ்வொரு கிறிஸ்தவரும் கிறிஸ்துவின் நற்செய்தியைப் பரப்ப முன் வர வேண்டும். கிறிஸ்துவோடு ஒன்றித்திருப்பதே நமது வாழ்வின் சட்டமாகக் கொள்ள வேண்டும். தனது நற்செய்திப் பரப்புதலின் வழியாக ஒருவன் கிறிஸ்துவோடு ஒன்றித்து வாழ முடியும். எந்த ஒரு செயலும் இந்தக் கிறிஸ்துவுடன் கூடிய ஒன்றிப்பைப் பாதிக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறார். எனவே, தான் பவுலடியார், வாழ்வு என்பது கிறிஸ்துவே எனக் கோடிட்டுக் காட்டும் இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.  


*பதிலுரைப்பாடல்*
பல்லவி: தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார்
திபா 145: 2-3. 8-9. 17-18
நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் புகழ்வேன். ஆண்டவர் மாண்புமிக்கவர்; பெரிதும் போற்றுதலுக்கு உரியவர்; அவரது மாண்பு நம் அறிவுக்கு எட்டாதது. பல்லவி
ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர். ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர். பல்லவி
ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே. தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார். பல்லவி

*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*


அல்லேலூயா, அல்லேலூயா! உம் திருமகனின் சொற்களை எங்கள் மனத்தில் இருத்தும்படி ஆண்டவரே, எங்கள் இதயத்தைத் திறந்தருளும். ..அல்லேலூயா.

*மன்றாட்டுகள்*


1. பெரிதும் போற்றுதலுக்கு உரிய அன்புத் தந்தையே எம் இறைவா! உம் திருஅவை உள்ள அனைத்துதரப்பினரும் நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே! என்பதனைத் தங்கள் மனங்களில் நிலைநிறுத்தி, இயேசுவின் நற்செய்திக்கு ஏற்பப் பணிகள் செய்து தம் வாழ்வை உமக்காக அர்பணிக்கத் தேவையான அன்பு, நீதி, தாராளக் குணம் ஆகியவற்றை நிறைவாய் பெற்ற தேவையான ஞானத்தைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. இரக்கமும் கனிவும் நிறைந்த அன்புத் தந்தையே எம் இறைவா! எம் குடும்பங்களில் அனைவரும் “உமது எண்ணங்கள் வேறு! எங்கள் எண்ணங்கள் வேறு” என்பதைத் தெளிவாய் உணர்ந்து, உமது எதிராய் முணுமுணுக்காமல் உமது உயரிய அன்பையும், நீதியையும் உணர்ந்து வாழத் தேவையான அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்

3. எங்கள் வானகத்தந்தையே, எம் இறைவா! உலகெங்கும் இயற்கைச் சீற்றங்களாலும், பூமி அதிர்ச்சியலும் மழையினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், முதியோர்கள், அனாதைகள், கைவிடப்பட்டோர் ஆகிய அனைவருக்கும் தேவையான பாதுகாப்பையும், சுகத்தையும், தொற்று நோயிலிருந்து பாதுகாப்பையும் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. அரசர்கெல்லாம் அரசரான எம் இறைவா எம் நாட்டில் நிலவும் அரசியல் பொருளாதாரச் சீர்கேடுகள் ஆட்சியாளர்களின் தவறான வழி நடத்துதல் இவற்றிலிருந்து வேறுபட்டுப் புதிய சிந்தனைகளும் தூய ஆவியின் வழி நடத்துதால், நல்ல வழியில் அழைத்துச் செல்லும் தன்னலமற்ற தலைவர்களை உருவாக்கித் தந்திட வரம் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


www.anbinmadal.org



No comments:

Post a Comment