Monday, April 16, 2018

பாஸ்கா காலம் நான்காம் ஞாயிறு - 22-04-2018

*பாஸ்கா காலம் நான்காம் ஞாயிறு - 22-04-2018*




*இன்றைய வாசகங்கள்*:


திருத்தூதர் பணிகள் 4: 8-12
1 யோவான் 3: 1-2

 யோவான் 10: 11-18

*திருப்பலி முன்னுரை*:


அன்பார்ந்த இறைமக்களே!
உயிர்ப்புக்காலம் நான்காம் ஞாயிறு - நல்லாயன் ஞாயிறு என்று திருஅவைக் கொண்டாடி வருகிறது. இன்றைய அவசர உலகில் ஒவ்வொருவரையும் வழி நடத்த ஓர் ஆயன் தேவைப்படுகிறார். நமது வாழ்க்கைப் பயணத்தில் யார் நமது ஆயன் என்று சிந்திக்க அழைக்கிறது இந்த ஞாயிறு.

நல்லாயன் ஞாயிறன்று, இறையழைத்தலுக்காக செபிக்கும் உலக நாளையும் திருஅவை அறிவித்துள்ளது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், "நம் சுயநலத்திலிருந்து வெளியேறிச் செல்வதே, நம் அனைவருக்கும் தரப்பட்டுள்ள முக்கியமான மறைபோதகப் பணி" என்று கூறியுள்ளார். சுயநலம் என்ற சுழல்காற்றில் சிக்கி இவ்வுலகம் சின்னாபின்னமாகி வருவதை நாம் அறிவோம். சுயநலம் அற்ற தலைவர்கள் நம் குடும்பங்களில் உருவாகின்றனர் என்பதை உறுதிசெய்தால், இவ்வுலகின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என்பதும் உறுதி.

பிஞ்சு மனங்களில் வெறுப்பு என்ற நஞ்சைக் கலந்து ஊட்டுவது குழந்தைகளுக்கு மிக நெருங்கியவர்களான பெற்றோரும், உற்றாரும் என்ற உண்மை, நம் அனைவரையும் குற்ற உணர்வோடு தலைகுனியச் செய்கிறது. நல்லாயன் ஞாயிறைக் கொண்டாடும் இன்று, நாம் ஒவ்வொருவரும் நாம் வாழும் சூழல்களில் மற்றவர்களை நல்வழியில் நடத்தும் வழிகாட்டிகளாக, நல்ல ஆயர்களாக வாழ்கிறோமா என்ற ஆன்மத் தேடலை மேற்கொள்வோம்.

பள்ளிப்படிப்பு, கல்லூரி படிப்பு ஆகியவற்றை முடித்துவிட்டு, வாழ்வில் சில முக்கிய முடிவுகளை எடுக்கக் காத்திருக்கும் இளையோரை இன்று சிறப்பாக இறைவனின் திருப்பாதம் கொணர்வோம். நல்லாயனாம் இயேசுவின் அழைத்தலை ஏற்று, மக்கள் பணிக்குத் தங்களையே அளிக்க முன்வரும் இளையோரை, இறைவன் வழிநடத்த வேண்டுமென்று, நல்லாயன் ஞாயிறன்று, இறையழைத்தல் ஞாயிறன்று மன்றாடுவோம்.


*வாசக முன்னுரை*


*முதல் வாசக முன்னுரை*:

இகழ்ந்து விலக்கப்பட்ட கல் இன்று முதன்மையான மூலைக் கல்லாக விளங்குகின்று. இயேசுவாலேயன்றி வேறு எவராலும் மானிடருக்கு மீட்பு கிடையாது. நாம் மீட்புப் பெறுவதற்காகவே இயேசு அவருடைய வாழ்க்கையை ஒரு முன் உதாரணமாக்கினர். இந்த உண்மையை உணர்ந்து செயல்பட நமக்குத் தேவையான ஞானத்தைப் பெற்றிட இன்றைய முதல் வாசகத்தில் நாம் கேட்கவிருக்கும் திருத்தூதர் பேதுருவின் வார்த்தைகளை மனதில் பதிவு செய்வோம்.  

*இரண்டாம் வாசக முன்னுரை*:

இறைவன் நம்மீது கொண்ட எல்லையற்ற அன்பினால் அவரது மக்கள் என நாம் அழைக்கப்படுகின்றோம். இறைமக்களாகவே இருப்போம். இயேசு குற்றமற்றவராய் இருப்பதுபோல நாமும் குற்றமற்றவர்களாய் நம்மைக் காத்துக் கொள்ள அழைக்கும் இன்றைய இரண்டாம் வாசகத்தில் ஒலிக்கும் திருதூதர் யோவனின் வார்த்தைகளைக் கவனமுடன் கேட்போம். 

பதிலுரைப் பாடல்

திபா 118: 1,8-9. 21-23. 26,28,29 (பல்லவி: 22)
பல்லவி: கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்தின் மூலைக்கல் ஆயிற்று!

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள். ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு. மனிதர்மீது நம்பிக்கை வைப்பதைவிட, ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்! உயர்குடியினர்மீது நம்பிக்கை வைப்பதைவிட, ஆண்டவரிடம் அடைக்கலம் புகுவதே நலம்! -பல்லவி

என் மன்றாட்டை நீர் கேட்டதால், எனக்கு நீர் வெற்றி அளித்ததால், உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன். கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று!  ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! -பல்லவி

ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்! ஆண்டவரது இல்லத்தினின்று உங்களுக்கு ஆசி கூறுகிறோம். என் இறைவன் நீரே! உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன்; என் கடவுளே! உம்மைப் புகழ்ந்தேத்துகின்றேன். ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில், அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு. –பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்


அல்லேலூயா, அல்லேலூயா! நல்ல ஆயன் நானே. நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக் கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.


*நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்*


1.    ஆற்றல் மிக்கத் தலைவரே எம் இறைவா! திருஅவையில் தங்கள் வாழ்வில் தம் சொல்லாலும், செயலாலும், தலைமை என்பது பணிப் பெறுவதற்கன்று, பணிபுரியவே என்று எம் கிறிஸ்துவின் போதனைகளைத் தனதாக்கிக் கொண்டு செயல்படும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய அனைவரும் தங்கள் வாழ்வைச் சாட்சிய வாழ்வாக்கிட வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. நீதியின் நாயகரே! எம் இறைவா!எம் நாட்டை ஆளும் தலைவர்கள் இனம், மொழி, சாதிச் சமய வேறுபாடுகளைக் களைந்துச் சமூக அக்கரையுள்ள நல் மேய்ப்பர்களாக இருந்து நாட்டை நல்வழியில் நடத்தவும், ஏழைப் பணக்காரன் என்ற இருளை அகற்றித் தேவையான அருள் ஒளியை எம் தலைவர்களுக்குத் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. படைப்பின் நாயகனே இவ்வுலகில் நிலவும், தீவிரவாதம், சாதியின் பெயரால் ஏற்படும் அச்சுறுத்தல்கள், பொருளாதரத்தில் முன்னேறிய நாடுகள் ஏழைநாட்டு மக்களை நசுக்கி, அதனால் தங்கள் வாழ்வை இழந்துத் தவிக்கும் மக்களின் துயரினைப் போக்கிப், போட்டி மனப்பான்மையை நீக்கிச் சமத்துவச் சகோதரத்துவம் தழைத்தோங்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4 ஏழைகளே நீங்கள் பேறுபெற்றவர்கள் என்று கூறிய எம் நற்செய்தியின் நாயனரே! எம் இறைவா! விதவைகள், அனாதைகள், கைவிடபட்டோர் வறுமையில் வாடுவோர் ஆகிய அனைவருக்கும் உம் அருளால் அவர்கள் வாழ்வு வளம் பெறவும், உள்நாட்டு போரால் தவிக்கும் சிரியாவின் மக்களுக்கு உமது உதவிக் கரம் நீட்டி அவர்களை ஆதரிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5 இரக்கத்தின் ஆற்றலே! எம் இறைவா! இன்றைய சூழலில் பெரியவர் முதல் குழந்தைகள் வரை அனைவரும் இறைநம்பிக்கையில் பற்றற்றவர்களாகவும், இளையோர் இவ்வுலக மாயைகளால் தங்களை இழந்த விடாமலும் இருக்கவும், உமது இறையழைத்தலை அனைவரும் உணர்ந்து இயேசுவின் சீடர்களாக வாழ்ந்திட அருள் புரியுமாறு  இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


www.anbinmadal.org

No comments:

Post a Comment